திருப்பதி ஏழுமலை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு டாலர்கள் உண்டியலில் செலுத்தி வருகிறார்கள்.
இந்த வகையில் பெறப்பட்ட பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இவற்றின் சில நகைகள் மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அலங்காரம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. எஞ்சிய நகைகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு இவைகள் மூலம் வட்டியாக தங்கம் பெறப்படுகிறது.
தற்போது 1300 முதல் 1600 கிலோ வரை தங்க நகைகள் இருப்பில் உள்ளன. இதில் 1300 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து தேவஸ்தான பரகாமணி (காணிக்கை எண்ணும் இடம்) உதவி அதிகாரி வரலட்சுமி கூறியதாவது:–
ஏழுமலையானுக்கு மாதந்தோறும் 30 முதல் 40 கிலோ வரை தங்க நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இதில் 100 முதல் 150 தங்க தாலிகளை பெண்கள் மாதந் தோறும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். மாதத்தில் சுமார் 75 கிலோ வெள்ளியில் காணிக்கையாக வருகிறது.
இவ்வாறு கிடைக்கும் தங்கத்தில் 1300 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூடுதலாக தங்கம் வட்டியாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காணிக்கையாக பெறப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள், டாலர்கள் இதுவரை நமது இந்திய ரூபாய்களாக மாற்றப்படாமலேயே உள்ளனர். இவை 60 முதல் 70 டன் வரை தேங்கி உள்ளன.
மேலும் உண்டியலில் செலுத்தப்படும் 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் காசுகளும் எண்ணப்படாமல் மூட்டை மூட்டையாக கிடங்குகளில் உள்ளன.
No comments:
Post a Comment