‘2016 தேர்தல் யுத்தத்துக்கு தயாராகிவிட்டேன்’ என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் 216-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. வீரபாண்டிய கட்டபொம் மன் நினைவு அறக்கட்டளை நிறுவனர் கே.எஸ்.குட்டி தலைமை வகித்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ‘மண்ணின் மானத்தை காக்க இன்னுயிர் நீத்த வீரர்களைக் கொண்டது தெற்குசீமை. வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்ற லட்சியத்துக்காக வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை போன்ற வீரர்கள் போரிட்டு தங்கள் உயிரைத் துறந்துள்ளனர். அவர்கள் வழியில் வந்த வாரிசுகள் தற்போது வறுமையில் நாடோடிகளாக வாழும் நிலை நிலவி வருகிறது.
ஜாதி மோதல்கள், உறவுகளுக்குள் மோதல் போன்ற காரணங்களால் அதிகமாக கொலைகள் நிகழும் பூமியாக இந்த பகுதி மாறி வருவது வேதனையளிக்கிறது.
நான் மேற் கொள்ளும் போராட்டங்கள் வாக்கு கிடைக்கும் என்பதற்காக அல்ல. மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் நலனுக்காகவே போராடி வருகிறேன்.
தற்போது கூட சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளேன். இதுதொடர்பாக ஆலோசனை தரும்படி நீதிபதிகள் கேட்டுள்ளனர். கால்நடைகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்துக்கும் பெரும் தீங்காக இருக்கும் சீமை கருவேல மரங்களை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை கொண்டு அகற்றலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளேன்.
வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரை ஆங்கிலேயர்கள் பிடித்து அடைத்து வைத்திருந்த கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. அதனை நினைவு மண்டபமாக மாற்ற வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க கயத்தாறு பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும். 2016-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் யுத்தத்துக்கு தயாராகிவிட்டேன்’ என்றார் அவர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரர் வி.வி.ஜெ.எஸ்.வீமராஜா, பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழுத் தலைவர் முருகபூபதி, வீரசக்கதேவி ஆலய விழாத் தலைவர் முருகேசபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம் மன் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ்2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. மதிமுக மாவட்ட செயலாளர்கள் எஸ். ஜோயல்(தூத்துக்குடி), சரவணன் (திருநெல்வேலி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.