Tuesday 27 October 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்திய இன்ஸ்பெக்டர் சிவமுருகன் மீது நடவடிக்கை தேவை! - தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன்


நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், கோககோலா, பெப்சி ஆலைகள் வெளியேறக் கோரி , அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்திய இன்ஸ்பெக்டர் சிவமுருகன் மீது நடவடிக்கை தேவை என அக்கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., 
திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோககோலா, பெப்சி ஆலைகள் தாமிபரணி நீரை இந்த உறிஞ்சி எடுப்பதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

ஆகையால் இந்த பன்னாட்டு பகாசுர ஆலைகளை வெளியேற்றக் கோரி நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இன்று (அக்டோபர் 27) என் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை அமைதி வழியில் நடத்திக் கொண்டிருந்தோம்.

ஆனால் கோககோலா, பெப்சி ஆலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கங்கைகொண்டான் காவல்துறை இன்ஸ்பெக்டர் சிவமுருகன் என்பவர் பணியில் குடிபோதையில் இருந்தபடியே திடீரென காட்டுமிராண்டித்தனமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது கொடூரமாக தடியடி தாக்குதலை நடத்தினார்.

இதில் 10க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தடியடி நடத்தி பன்னாட்டு ஆலைகளால் ஏவிவிடப்பட்ட ரவுடி போல நடந்து கொண்ட கங்கை கொண்டான் இன்ஸ்பெக்டர் சிவமுருகன் மீது தமிழக முதல்வர்  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment