Wednesday, 21 October 2015

திருச்சி அருகே விபத்தில் மரணமடைந்த 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் உத்தரவு


திருச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சிராப்பள்ளி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, இருங்களூர் கிராமம் அருகே 20.10.2015 அன்று சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், அரசுப் பேருந்தில் பயணம் செய்த சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த திருமால் என்பவரின் மனைவி கோட்டீஸ்வரி, மகன் ஆத்திராஜ், மேடவாக்கத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சுபின், 

திருநெல்வேலி மாவட்டம், புலிமான்மங்கலத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் வினோத், சிந்துபூந்துறை பகுதியைச் சேர்ந்த நெல்லையப்பன் என்பவரின் மகன் ஹரிகணேஷ், திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் மகள் அன்னம்மாள், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலைச் சேர்ந்த கென்னடிராஜ் என்பவரின் மகன் மனோஜ், மார்த்தாண்டம், களியன்விளைவீடு பகுதியைச் சேர்ந்த கப்ரியேல் என்பவரின் மகன் ஜின்னிஸ்ஹெட்மெட்  மற்றும் அகஸ்தீஸ்வரம், கீழகோணம் பகுதியைச் சேர்ந்த ஜேசுரத்தினம் என்பவரின் மகன் ஆண்டோசஞ்சு ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை விபத்தில் 15 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்திட மருத்துவமனை அதிகாரிகளுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த சாலை விபத்து குறித்த தகவல் எனக்குக் கிடைக்கப் பெற்றதும், எனது உத்தரவின் பேரில் தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி, கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அரசு கொறடா சு.மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து உரிய மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தும், தேவையான நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டும் வருகிறார்கள்.
 
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் கொண்டு செல்லவும் ஆணையிட்டுள்ளேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment