Tuesday 20 October 2015

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி நாளை சாமி தரிசனம்



ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி உருவாக்கப்பட உள்ளது. புதிய தலைநகரம் உருவாக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (வியாழக்கிழமை) அமராவதியில் நடைபெற உள்ளது. அதில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். 

இதற்காக அவர், நாளை காலை 9.25 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார். பகல் 11.55 மணிக்கு விஜயநகரத்தில் உள்ள கண்ணவரம் விமான நிலையம் வந்தடைகிறார். பகல் 11.55க்கு கண்ணவரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு அமராவதி நகர ஹெலிகாப்டர் தளத்தை வந்தடைகிறார். பின்னர் 12.30 மணியில் இருந்து 1.45 மணிவரை நடக்கும் ஆந்திர மாநில புதிய தலைநகரத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். 

பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு 1.55 மணிக்கு அமராவதி ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக 2.25 மணிக்கு கண்ணவரம் விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு விமானம் மூலமாக 3.25 மணிக்கு திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வருகிறார். 

மாலை 3.30 மணியில் இருந்து 3.45 மணிவரை ரேணிகுண்டா விமான நிலையம் அருகில் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு உள்ள கருடா விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி மாலை 3.55 மணிக்கு திறப்பு விழா மேடையில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் 4 மணியில் இருந்து 4.15 மணிவரை திருப்பதியில் மொபைல் தயாரிப்பு நிறுவன பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

மாலை 4.20 மணியில் இருந்து 5.10 மணிவரை திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதைத்தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திருமலைக்கு செல்கிறார். மாலை 6.15 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். கோவிலில் இருந்து வெளியே வரும் பிரதமர் திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். 

பின்னர் திருமலையில் இருந்து புறப்பட்டு 6.55 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். இரவு 7 மணிக்கு ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு தனி விமானத்தில் டெல்லிக்கு செல்கிறார். இரவு 9.35 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை அடைகிறார். 

பிரதமர் நரேந்திரமோடி திருப்பதி, திருமலைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment