Monday 26 October 2015

பாரதிய ஜனதா ஆட்சியில் அதிகரித்தும் வரும் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறைகள்; கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்! அக்டோபர் 31 திருச்சிக்கு அணிதிரண்டு வாரீர்! வைகோ அழைப்பு



ம.தி.மு.க பொதுச்செயலாளரும் மக்கள் நல கூட்டு இயக்க ஒருங்கிணைபாளருமான வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கடந்த ஓர் ஆண்டில் இந்துத்துவா மதவெறி கூட்டத்தின் வெறியாட்டம் அதிகமாகி வருகின்றது. இந்தியாவின் பன்முகத் தன்மையை சீரழிக்கும் வகையில் ஒரே மதம், ஒரே நாடு என்று கூறி, இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்று கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த சக்திகளின் கையில் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரம் சென்ற பிறகு நாட்டின் மதச் சார்பின்மைத் தத்துவம் புதைகுழிக்கு அனுப்பப்பட்டு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன.
மதச் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் குறி வைத்துத் தாக்கப்படுகின்றன. மக்களின் உணவு பழக்கங்களைக்கூட மதவெறிக் கும்பல் அச்சுறுத்தி வருகின்றது. உத்திரப்பிரதேச மாநிலம், தாத்திரியை அடுத்துள்ள பிசோதா என்ற கிராமத்தில் முகமது இக்லாக் தனது வீட்டில் பசு மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இந்துத்துவா வெறியர்கள் அவரை வீடு புகுந்து தாக்கி கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர்.
மாட்டுக் கறி விருந்து நடத்தினார் என்று காஷ்மீர் மாநில சட்டமன்ற உறுப்பினர் சேக் அப்துல் ரஷீத் மீது சட்டமன்றத்திலேயே பா.ஜ.க. உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
இந்துத்துவா மதவெறி சக்திகளை எதிர்த்து கருத்துப் பரவல் செய்து வந்த முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்ந் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோர் மதவெறிக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய அரசியல் சட்டத்தின் கருத்துரிமைக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.
இதனைக் கண்டித்து இந்தியாவின் 40 க்கும் மேற்பட்ட இணையற்ற இலக்கிய சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சாகித்ய அகாதமி விருதுகளை திருப்பி அனுப்பி உள்ளனர்.
மத வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரதமர் மோடி, நாட்டில் நடக்கும் மதவெறி கும்பல்களின் அட்டூழியங்களை மௌன சாட்சியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மதவெறி வன்முறைகள் போலவே பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீது திட்டமிட்டு கொடூர வன்முறைகள் நடத்தப்படுகின்றன. அரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டம், சோன்பேட் என்ற கிராமத்தில் தலித் குடும்பமே தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலி ஆகிவிட்டனர். இந்த மாநில அரசு சாதி ஆதிக்க கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
இந்நிலையில், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங், தலித் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தை இரக்கமற்ற முறையில், “சில இடங்களில் நாய் மீது சிலர் கல்லெறிவார்கள்; இதற்கெல்லாம் அரசாங்கத்தைக் குறை கூற முடியுமா?” என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.
நரேந்திர மோடி ஆட்சியில் இந்துத்துவா அடிப்படைவாதிகளின் மத வன்முறைகள் அதிகரித்து விட்டதைக் கண்டித்தும், பா.ஜ.க. ஆட்சி புரியும் மாநிலங்களில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்தும், கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்தும் திருச்சி மாநகரில் அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 11 மணி அளவில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. இந்த அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், ஜனநாய முற்போக்குவாதிகளும், பொதுமக்களும் பெருமளவில் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கேட்டுக் கொண்டுள்ளார்

No comments:

Post a Comment