பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நாளை (25–ந்தேதி) ஏற்றப்படுகிறது.
அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியின் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. அதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள்.
சென்னையில் இருந்து மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விழுப்புரம் கோட்டம், கும்பகோணம் கோட்டம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களின் இயக்கம் இன்று மாலை முதல் தொடங்குகிறது.
அதற்காக 1, 2 மற்றும் 3–வது பிளாட்பாரங்களில் கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைத்து தனி சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் டோக்கன் பெற்று வரிசையாக சென்று பஸ்களில் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் 200–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment