சபரிமலை அய்யப்பன் கோவிலில் அதிக பொருட்செலவில் பக்தர்களால் நடத்தப்படும், படி பூஜைக்கு 2031–ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அலுவலர் ரேணுகோபால் தெரிவித்தார்.
படி பூஜை
இதுகுறித்து, திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அலுவலர், ரேணுகோபால் கூறியதாவது:–
சபரிமலை அய்யப்பன் கோவிலில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட ஏராளமான பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் படி பூஜை, மண்டல, மகரவிளக்கு சீசனை தவிர மற்ற நடை திறப்பு நாட்களில் நடத்தப்படுகிறது. படி பூஜை நடத்துவதற்கான கட்டணம் ரூ.40 ஆயிரம் ஆகும்.
இந்த சிறப்பு பெற்ற படி பூஜை நடத்துவதற்கு, 2031–ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆந்திரா, தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் படி பூஜைக்கு முன்பதிவு செய்து இருக்கிறார்கள். 2032–ம் ஆண்டுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
உதயாஸ்தமன பூஜை
படி பூஜைக்கு அடுத்த படியாக உதயாஸ்தமன பூஜை நடத்த 2022–ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.25 ஆயிரம் ஆகும். 2023–ம் ஆண்டு முதல் நடத்த உள்ள பூஜைக்கு தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், சகஸ்ரகலச பூஜைக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் ஆகும்.
கோவில் திருவிழா நாட்களில் நடத்தப்படும், உத்சவ பலி பூஜைக்கு ரூ.10 ஆயிரமும், புஷ்பாபிஷேகத்திற்கு ரூ.8,500–ம், சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்க ரூ.7,500–ம், வெள்ளி அங்கி அணிவிக்க ரூ.4,000–ம், லட்சார்ச்சனைக்கு ரூ.4,000–ம், களபாபிஷேக பூஜைக்கு ரூ.3,000–ம், உச்ச பூஜைக்கு ரூ.2,001–ம் என கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
அடையாள அட்டை
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் சிறு குழந்தை அய்யப்ப பக்தர்களுக்கு பம்பை ஆஞ்சநேயா ஆடிட்டோரியத்தில் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அடையாள அட்டை பெற முடியாதவர்கள், அவர்களாகவே பெயர், முகவரி, தொடர்பு தொலைபேசி எண்களுடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்தால் கூட்டம் அதிகமாக இருக்கும் வேளைகளில், அவர்கள் தவறி விட நேர்ந்தால் அவர்களை எளிதில் கண்டு பிடிக்க வசதியாக இருக்கும். பக்தர்கள் நலன் கருதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment