சென்னையில் மழை பாதிப்பு காரணமாக, பள்ளி - கல்லூரிகளுக்கு இம்மாதம் 22-ம் தேதி வரை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
இதே போல் பள்ளி - கல்லூரிகளுக்கு இம்மாதம் 22-ம் தேதி வரை விடுமுறை என்று காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. அத்துடன், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த சில தினங்களாக வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை தொடங்கி மறுநாள் காலை வரை இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மழை நின்றாலும் சென்னை, புறநகர்களின் தாழ்வானப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. தீவுகளாக மாறிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணி தொடர்கிறது. மீட்புப் பணியில் தமிழக அரசுடன் இணைந்து ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளதால் மீண்டும் வெள்ளம் வருமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். தொடர் மழையால் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பு இன்று தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லை என்பதால், பள்ளி - கல்லூரிகளுக்கான மழை விடுமுறை நவம்பர் 22 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வருகை நாட்களை சமன் செய்ய சனிக்கிழமையிலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படுவதற்கான திட்டங்களை எடுக்கப்போவதாக பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment