வெள்ளம் பாதித்த அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் பல வாரங்கள் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை விட மிகவும் கடுமையான பாதிப்புகளை கடந்த சில நாட்களில் பெய்த மழை ஏற்படுத்தியிருக்கிறது. மீட்புப் பணிகளை செய்வதைத் தாண்டி அடுத்தக்கட்ட பணிகளையும் சிந்தித்து செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் அனைத்தும் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடலூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட மழை& வெள்ள பாதிப்புகள் சரி செய்யப்படுவதற்கு முன்பாகவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்திருக்கிறது.
கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீர் இப்போது தான் படிப்படியாக வடியத் தொடங்கியிருக்கிறது. மழை நீர் தேங்கி நின்றதாலும், அதில் கால்நடைகள் உயிரிழந்து கிடந்ததாலும் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பிருக்கிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் கழிவு நீர் குழாய்கள் உடைந்து குடிநீருடன் கலந்து விட்டதால் அங்கும் தொற்று நோய் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நிலைமையும் இது தான். இவற்றைத் தவிர வழக்கமாக மழைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வந்த பின் வாடுவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது ஆகும். ஆனால், இந்த தத்துவத்தின் மகத்துவத்தை தமிழக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை. பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், இந்த யோசனைகள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாததன் விளைவு தான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் இப்போது வடகிழக்கு பருவ மழையின் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டு நிலைகுலைந்து போயிருக்கின்றன.
தொற்று நோய்களை தடுக்கும் விஷயத்திலும் தமிழக அரசின் இந்த அலட்சியம் தொடர்ந்து விடக் கூடாது என்பது தான் எனது கவலை ஆகும். எனவே, தொற்று நோயை தடுக்க வெள்ளம் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு புகைத் தெளித்தல், கிருமி நாசினி தெளித்தல், நீர் தேக்கத் தொட்டிகள்- திறந்த நிலை குடிநீர் ஆதாரங்கள் ஆகியவற்றில் குளோரின் சேர்த்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, வெள்ளம் பாதித்த அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுக்களை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment