Sunday 15 November 2015

பாமக அணி 234 தொகுதிகளில் போட்டியிடும்: 150-ல் வெற்றி பெறும் - பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நம்பிக்கை



பாமக தலைமையில் அமையக்கூடிய அணி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அதில் 150 தொகுதிகளில் வெற்றிபெறும் என பாமக தலைவர் ராமதாஸ் கோவையில் தெரிவித்தார்.
ஈரோட்டில் கொங்கு கவுண்டர் பேரவைத் தலைவர் மணிக்கவுண்டர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள, விமானத்தில் ராமதாஸ் நேற்று கோவை வந்தார்.
அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: கனமழையால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. 2 நாள் மழையில் சென்னை நகரமே மிதக்கிறது. பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், சரியான திட்டமிடல் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திரா, காஷ்மீரில் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டபோது, அம்மாநில அரசுகள் முயற்சியால் பிரதமர் நிதி கிடைத்தது. இதுபோல வெள்ளப்பெருக்கு பாதிப்புக்கு நிதியுதவி பெற தமிழக முதல்வர் ஒரு கடிதம் கூட எழுதவில்லை. பாரம்பரிய நீர் கட்டமைப்புகளில் நீரை சேமித்தாலே ஆண்டுக்கு 390 டிஎம்சி நீர் கிடைக்கும். தமிழகத்தில் அதிக மழை கிடைத்தும் கூட குறைந்த அளவு நீருக்காக பிற மாநிலங்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பாலாற்றில் தண்ணீர் செல்வது அதிசய நிகழ்வாக உள்ளது.
இப்போதுள்ள நிலையிலேயே பாமக பலமாகத்தான் உள்ளது. மக்களிடம் ஒப்பந்தம் போடுவதுபோல வளர்ச்சிக்கான திட்டங்களை வரைவு அறிக்கையாக உருவாக்கியுள்ளோம். தற்போதுதான் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி முடிவில் தெளிவாகி வருகின்றன. மக்கள் நலக் கூட்டணியில் 4 கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக கட்சியின் விஜயகாந்த் எங்களுடன் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை. மற்ற இரு காங்கிரஸ் கட்சிகளும் எந்த முடிவில் உள்ளன எனவும் தெரியவில்லை. 2016 ஜனவரியில்தான் கட்சிகளின் கூட்டணி முடிவு தெரியவரும். பாமக தலைமையில் அமையக்கூடிய அணி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அதில் 150 தொகுதிகளில் வெற்றிபெறும்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படிதான் அன்புமணி ராமதாஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளார். பல நிலைகளைத் தாண்டியே அவர் கையெழுத்திட்டுள்ளார். இது அரசியல் காரணத்துக்காக காங்கிரஸ் கட்சியால் போடப்பட்ட பொய்வழக்கு.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து இருந்தோம். தலித் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதை விட்டுவிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிலைக்கு அவர்கள் சென்றார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் எனக்கு விருது கொடுத்து, புகழ்ந்தும் பேசியிருக்கிறார். கடைசியில் அக்கட்சியின் போக்கு எங்களுக்குப் பிடிக்கவில்லை.
மதுரையில் தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு ஊராட்சியில் ரூ.30 லட்சம் என்றால், 12,500 ஊராட்சிகளில் சுமார் ரூ.3750 கோடி ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. 2014-ம் ஆண்டு இத்திட்டத்துக்கு ரூ.5155.46 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 74 சதவிகிதம் ஊழல் நடைபெற்றுள்ளது. எனவே இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதிமுக ஆட்சியில் 2 கட்டமாக ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட அத்துறை லாபத்தில் இயங்கவில்லை. 2014-ல் மின்வாரியத்துக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 8 மாதங்களாகியும் மின்வாரிய வரவு-செலவு கணக்குகள் வெளியிடப் படவில்லை. நவம்பர் இறுதிக்குள், இதை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் மீண்டும் மின் கட்டணம் உயரும். 18 வகையான ஊழல் இருப்பதாக பட்டியல் தயாரித்து விளக்கமாக ஆளுநரிடம் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சியின் மாநில தலைவர் கோ.க.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் கரூர் பி.எம்.கே.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

No comments:

Post a Comment