Friday, 20 November 2015

இலங்கையில் ஐ.நா. குழு கண்டுபிடித்த ரகசிய சித்ரவதை முகாம்! ஐ.நா. குழுவிடம் சாட்சியம் அளித்த தமிழர்களை மிரட்டும் இலங்கை அரசு! இனியேனும் இந்திய மத்திய அரசே! மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடு!! எடுக்க வேண்டி தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் வேண்டுகோள்


தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,

ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போக செய்யப்பட்டோர் தொடர்பான குழு இலங்கையில் பயணம் மேற்கொண்டு திருகோணமலையில் சிங்கள ராணுவ கடற்படை தளத்தில் ரகசிய சித்ரவதை தடுப்பு முகாம்கள் இருப்பதை கண்டுபிடித்து உலகுக்கு எடுத்துச் சொல்லியிருப்பது ஆறுதலை தரும் நேரத்தில் அந்த முகாம்களில் நம் உறவுகள் அனுபவித்திருக்கும் சித்ரவதைகளை எண்ணும் போது பெரும் வேதனையளிக்கிறது.

பேனாட்டு கைம் தலைமையில் டு உங் பெய்க், ஏரியல் துலிட்ஸ்கி ஆகியோரை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போக செய்யப்பட்டோர் தொடர்பான குழுவினர் 10 நாட்கள் தமிழீழத் தாயகப் பகுதிகளில் தமிழ் உறவுகளிடம் தரவுகளை சேகரித்து இந்த சித்ரவதை தடுப்பு முகாம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

அத்துடன் இந்த முகாமில் எப்படியெல்லாம் எங்கெங்கே சித்ரவதை நடந்தது என்பதை சிங்கள ராணுவ அதிகாரி ஒருவரே .நா. குழுவிடம் விவரித்துள்ளார். இதேபோல் இன்னும் ரகசிய சித்ரவதை தடுப்பு முகாம்கள் இருக்கக்கூடும் எனவும் .நா. குழு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களாக்கப்பட்டோர் கொடூர சித்ரவதைகளுக்குள்ளாகி இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். "வலுக்கட்டாயமாக ஒருவரை காணாமல் போகச் செய்வது என்பது சர்வதேச சட்டவிதிகளின் படி குற்றமாகும். இது ஒரு பயங்கர இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றமாகும். .நா. குழுவினர் கண்டுபிடித்துள்ள இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றத்துக்கான முக்கியமான சாட்சியம்.

3 பேர் கொண்ட .நா. குழு மட்டுமே வந்து இவ்வளவு பெரிய கொடூரத்தை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. ஆகையால் இலங்கை மீதான காணாமல் போகச் செய்யப்படுதல், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே சிங்களத்தின் படுபயங்கரமான இனப்படுகொலை கொடூரங்கள், போர்க்குற்றங்கள் உலகுக்கு அம்பலமாகும்.

ஆகையால் இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டே ஆக வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேசம் ஏற்கச் செய்வதற்கான அத்தனை ஆக்கப்பூர்வமான அழுத்தம் தரக்கூடிய நடவடிக்கைகளை உலகத் தமிழினம் முன்னெடுக்க வேண்டும். இதுநாள் வரையில் சிங்களத்தின் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக மவுனியாக இருந்து வரும் இந்திய மத்திய அரசு இனிமேலும் இலங்கையுடனான நட்புறவை துண்டித்து மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

தற்போதும் கூட .நா. குழுவினர் முன் சாட்சியம் அளித்த தமிழர்களை கைது செய்வோம் என சிங்களம் மிரட்டுகிறது. சிங்களத்தின் இந்த மிரட்டலை இந்திய அரசு வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

மேலும் இலங்கை சிறையில் இன்னமும் வாடுகிற தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்வதற்கு அந்த நாட்டு அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment