பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தமிழக அரசு, அப்பணிகளை செய்யாததால் எழுந்துள்ள எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு 5 நாட்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் 500&க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. அந்த பகுதிகளில் இயல்பு நிலையை ஏற்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து அழைத்து வரப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்ட மக்களின் நிலை வன்னி கம்பி வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட தமிழர்களின் நிலையை விட மிக மோசமாக உள்ளது என்பது தான் உண்மை.
ஒரு நிவாரண முகாமில் 2000 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தால், அவர்களில் 500 பேருக்கான உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பால் கூட வழங்கப்படுவதில்லை என்பதால் பச்சிளம் குழந்தைகள் பசியில் துடிப்பது பரிதாபமாக உள்ளது. வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாததால் அங்குள்ள மக்களால் இயல்பாக வாழ முடியவில்லை.
மழையால் ஏற்பட்ட வெள்ளமே இன்னும் வடியாத நிலையில், வீராணம் ஏரியில் பெருகி வரும் நீரை மாவட்ட நிர்வாகம் அவசர அவசரமாக திறந்து விட்டிருக்கிறது. வீராணம் ஏரி நீரை முறைப்படுத்தி திறந்து விட்டிருந்தால் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திருக்கலாம். ஆனால், சற்றும் பொறுப்புணர்வு இல்லாமல் வீராணம் ஏரி நீர் திறந்து விடப்பட்டதால் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நிலைமை மோசமடைந்திருக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான துணிசிராமேடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி சிதம்பரம்&காட்டுமன்னார்கோவில் சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
போராட்டம் நடத்திய மக்களிடம் அதிகாரிகளை அனுப்பி பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, காவல்துறையினரை அனுப்பி தடியடி நடத்தியிருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி ஒருவரை காவல்துறை உயரதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கி, மிதித்து கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்ந்த இடத்தை விட்டு அகதிகளைப் போல தங்கியிருப்பதும், எந்த நேரத்தில் பாம்புகளும், நச்சுப் பூச்சிகளும் கடிக்குமோ? என அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதும், தாங்களும் பசியில் வாடி, தங்களின் குழந்தைகளும் பசியில் துடிப்பதைக் கண்டு வேதனைப்படுவதும் யாருக்கும் நேரக்கூடாத கொடுமைகள் ஆகும். இந்த துயரங்கள் எல்லாம் நாளுக்கு ஒரு மாளிகையில் வாழும் ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதனால் தான் உணவும், பாலும் கேட்டு போராட்டம் நடத்தியவர்களை கண்மூடித்தனமாக தாக்க வைத்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் உள்ள தங்களுக்கு எதிராக சிறு எதிர்ப்பு கூட எழக்கூடாது என்ற ஆணவத்தின் வெளிப்பாடு தான் இதுவாகும்.
ஆணவத்தின் உச்சி என்பது அழிவுக்கு இட்டு செல்லும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அதை உணர்ந்து ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். எதிர்ப்புக் குரல் எழுப்பும் மக்களை தடி கொண்டு அடக்குவதற்கு பதிலாக அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment