Sunday, 15 November 2015

கோவை நகரில் சாலையோர இடங்கள் ஆக்கிரமிப்பு ! வேடிக்கை பார்க்கும் அரசு அதிகாரிகள் !







கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு முக்கியமான சாலைகள், அகலப்படுத்தப்படாத காரணத்தால், நகருக்குள் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. விபத்துக்களின் எண்ணிக்கையும், எகிறிக் கொண்டிருக்கிறது. வாகனங்களுக்கே இடமில்லாத ரோட்டில், பொது மக்கள் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில், பல ரோடுகளில் நடைபாதைகளே இல்லை. நடைபாதைகள் இருந்தாலும், அவை மக்களுக்குப் பயன்படாமல், கடைகளாலும், கடைகளின் பந்தல்கள் மற்றும் பொருட்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றை அவ்வப்போது அகற்றி, நடைபாதைகளை மக்களுக்கு மீட்டுத் தர வேண்டிய பொறுப்பு, அரசுத்துறைகளுக்கு உள்ளது.
முன்பெல்லாம்,மாநகராட்சி நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து, இந்த நடவடிக்கைகளை அவ்வப்போது எடுப்பதுண்டு.இத்தகைய பணிகளை, மாவட்ட நிர்வாகமே ஒருங்கிணைக்கும். ஆனால், கோவை நகரில், கடந்த சில ஆண்டுகளாக, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடப்பதேயில்லை.இந்த காரணங்களால், கோவை நகரில், காளான்களைப் போல ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.
கிராஸ்கட் ரோடு, நுாறடி ரோடு, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, ரங்கேகவுடர் வீதி, டி.பி.ரோடு, காந்திபுரம் வீதிகள், வெரைட்டி ஹால் ரோடு, என்.எச்.ரோடு, காமராஜ் ரோடு, நஞ்சப்பா ரோடு, பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி ரோடு, தடாகம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என நகரின் முக்கியச்சாலைகள் அனைத்திலுமே, சாலையோரம் மற்றும் நடைபாதைகள், வாகனங்களுக்கோ, மக்களுக்கோ முழுமையாகப் பயன்படுவதாகயில்லை.திருச்சி ரோடு மற்றும் அவிநாசி ரோடுகளில், வேறு விதமான ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன. திருச்சி ரோடு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அதைப் பராமரிக்கும் பொறுப்பு, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமுள்ளது. இதில், நடைபாதையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, பேக்கரி மற்றும் ஓட்டல்களாக மாற்றப்பட்டுள்ளன.
இவை எதையுமே, சம்மந்தப்பட்ட துறையினரோ, மாநகர காவல்துறையினரோ, மாநகராட்சி அதிகாரிகளோ கண்டு கொள்வதேயில்லை. மக்கள் பிரதிநிதிகள் யாரும், இதற்காக குரல் கொடுப்பதில்லை. இதனால், பாதிக்கப்படுவது, அப்பாவி பொதுமக்கள் தான்.
கோவை நகரில், பல ரோடுகளை விரிவாக்கம் செய்யவே முடியாது என்ற நிலையில் தான், விபத்துக்கள் அதிகரித்து, விலை மதிக்க முடியாத பல உயிர்கள் பலியாகின்றன.
குறைந்தபட்சமாக, சாலையோர, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே, பாதசாரிகள் பலியாவதையாவது தடுக்கலாம். இதற்கான நடவடிக்கைகளை இனியாவது முடுக்கி விட வேண்டிய பொறுப்பு, மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது.

No comments:

Post a Comment