Saturday 21 November 2015

வெள்ள பாதிப்பு பற்றி அதிகாரிகள் தயார் செய்த அறிக்கையை மத்திய அரசுக்கு இதுவரை அனுப்பவில்லை: நிர்மலா சீதாராமன்


வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு மாநில அரசு விரைவில் அனுப்பி வைக்கவேண்டும் என மத்திய இணை மந்திரி நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சி.டி.ஓ. காலனி, சசிவரதன் நகர், தர்காஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி நிர்மலா சீத்தாராமன், இன்று நேரில் பார்வையிட்டார். தெருவில் தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்ட அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் அவரிடம், தங்கள் பகுதியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.  இதையடுத்து அவர், வெள்ள பாதிப்பு பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  அதன் பின்னர் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன், செய்தியாளர்களிடம் பெசிய தாம்பரத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி உள்ளது. மழை தீவிரமாக இருந்தபோது ஒரு சிலருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கவில்லை. போதிய முன்ஜாக்கிரதை எச்சரிக்கைகள் எல்லா இடங்களிலும் செய்யப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

சென்னை மாநகர திட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. மழைநீர் வடிகால்வாய்கள் முறையாக இல்லை. நீர் வரத்து வரும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. குளத்துக்கு வரவேண்டிய மழைநீர் செல்லும் வழியை மறித்து சிமெண்டு சாலை அமைத்து உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சினை உள்ளது.

மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு கடலுக்கு மழைநீர் செல்லும் நீர்வரத்து பகுதியில் தண்ணீர் அதிகமாக வந்ததால் வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நீர்வரத்து பாதை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் பல இடங்களில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன.

குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. அதில் இருந்த மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுத்து இருந்தால் பெரும் சேதத்தை தவிர்த்து இருக்கலாம்.

தமிழக அரசு வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கையை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் என்ன நிலையில் உள்ளன? என்பது குறித்து அதிகாரிகள் தயார் செய்த அறிக்கையை மத்திய அரசுக்கு இதுவரை அனுப்பவில்லை. வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு மாநில அரசு விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்’’என்று கூறினார். 

No comments:

Post a Comment