தூத்துக்குடியில் கடந்த இரண்டு தினங்கள் பெய்த கனமழையில் மாவட்டத்தில் முத்தையாபுரம், முள்ளக்காடு, புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகள் வௌ்ள நீரில் மூழ்கியுள்ளது .
வங்கக்கடலில் அந்தமான் தீவுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை மழை தொடர்ந்து பெய்தது. இந்நிலையில் இன்றும் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
இதனால் பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள உப்பளங்கள் மழைநீர் தேங்கி குளம்போல் மாறி உள்ளன. தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ரெயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி–நெல்லை பாசஞ்சர் ரெயில், மைசூர், கோவை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
கனமழை காரணமாக தூத்துக்குடி, கோரம்பள்ளம் குளம் முழுவதுமாக நிரம்பியது. இந்த குளத்திற்கு கடம்பூர், கயத்தாறு, மணியாச்சி, கொம்பாடி, செக்காரக்குடி, உமரிக்கோட்டை, மகிளம்புரம், தளவாய்புரம், மறவன்மடம், அந்தோணியார்புரம், தட்டப்பாறை விலக்கு ஆகிய பகுதிகளில் பெய்த மழைநீர் காட்டாறு வெள்ளமாக மாறி அதிகளவில் வந்தது. இதனால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. குளம் உடையும் அபாயத்தை தடுக்க குளத்தில் 18 மடைகள் திறக்கப்பட்டன. இதனால் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் உப்பாற்று ஓடை வழியாக கடலுக்கு செல்கிறது.
உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் இந்த வெள்ள நீர் கரைகளை உடைத்து அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. அத்திமரப்பட்டி கிராம பகுதியில் நேற்றிரவு 10 மணி அளவில் மழை வெள்ளம் புகுந்தது. இதையடுத்து அக்கிராம மக்கள் அங்குள்ள கோவிலில் மணி அடித்து அபாய எச்சரிக்கை விடுத் தனர். கிராமத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் திரண்டு மழை வெள்ளத்தை தடுக்கும் வகையில் மணல் மூட்டை களை அடுக்கி வைத்தனர்.
ஆனாலும் வெள்ளத்தை தடுக்க முடியவில்லை. வெள்ளத்துடன் பாம்புகளும் படையெடுத்து வந்ததால் குழந்தைகள் பயத்தில் அலறினர். இதைத்தொடர்ந்து தெர்மல் நகர் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மீட்டு தூத்துக்குடி முத்தையா புரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் தூத்துக்குடி பகுதியில் உள்ள 120–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த இரண்டு தினங்கள் பெய்த கனமழையில் மாவட்டத்தில் முத்தையாபுரம், முள்ளக்காடு, புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகள் வௌ்ள நீரில் மூழ்கியுள்ளது வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை தீயனைப்புதுறை வீரர்கள் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் பிராதன சாலை அருகே 10 புதிய குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு முழுவதையும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குடியிருப்பு பகுதிக்கு மீட்பு படையினர் செல்ல முடியாத வகையில் வெள்ளத்தால் அப்பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு 2–வது நாளாக விடுமுறை அளித்து ஆட்சியர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment