Thursday, 19 November 2015

தமிழக வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு அமைக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை


தமிழக வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவை அமைத்து உத்தரவிடுமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை) உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் உரையாடினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு, நிவாரணம் மற்றும் மீட்ப்புப் பணிகள் குறித்த தற்போதைய நிலவரத்தை அவரிடம் விவரித்தார்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் நிலவரத்தை அவரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
மாநில அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அமைச்சர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் கடலூர் மாவட்டத்தில் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.
மேலும், நிவாரணப் பணிகளில் மத்தியப் படைகளை அனுப்பி உதவியதற்காக அமைச்சரிடம் முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.
மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாகவும், வரும் 23-ம் தேதிக்குள் வெள்ளச் சேதங்கள் குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும், அதன் அடிப்படையில் தமிழக அரசுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இதுதவிர, தமிழக வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் மத்திய குழுவினர் தாங்களாகவே நேரடியாக சேத நிலவரத்தை பார்வையிட்டு மத்திய அரசின் உதவித் தொகையை தமிழகம் தாமதின்றி பெற வழிவகை செய்ய முடியும் எனக் கூறியுள்ளார்"
இவ்வாறு தொலைபேசி உரையாடல் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் உறுதி:
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசியது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா என்னுடன் தொலைபேசியில் பேசினார்.
தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய படைகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவியிருக்கிறது.
தமிழக முதல்வரிடம் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்துள்ளேன்" என்றார்.

No comments:

Post a Comment