முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
பாக் ஜலசந்தியில் பாரம்பரிய பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக கடலோர பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்தி செல்வதும், சிறை பிடிப்பதும் அடிக்கடி நடக்கும் வாடிக்கையான செயலாக உள்ளது. இதுபற்றி பல முறை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவமாக கடந்த 18–ந்தேதி இரவு மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் 14 பேரையும் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர்.
அவர்கள் இலங்கை காங்கேசன் துறையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல 8–11–2015 அன்று இலங்கை கடற்பகுதியில் எந்திர பழுதால் சிக்க தவித்து கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை பிடித்து சென்றனர். இதுபற்றி தங்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்தேன். அந்த மீனவர்களை இதுவரை விடுவிக்கவில்லை.
ஏற்கனவே இலங்கை படையினரால் பிடித்து செல்லப்பட்ட 47 மீன்பிடி படகுகள் இன்னும் திருப்பி தரப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்து இருப்பதால் அந்த படகுகள் இனி பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக சேதம் அடைந்துள்ளன. தற்போது தற்காலிக இழப்புகளை சந்தித்து வரும் ஏழை மீனவர்கள் படகுகள் நாசத்தால் நிரந்தர பெரும் போழப்பை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.
இந்தியா – இலங்கை இடையே 1974 மற்றும் 1976–ல் கச்சத்தீவு தொடர்பான ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என எனது அரசு உறுதியாக நம்புகிறது. கச்சத்தீவு பிரச்சினைதான் இந்த சம்பவத்துக்கெல்லாம் காரணம் ஆகும்.
பாக்ஜல சந்தியில் மீன் பிடிப்பது என்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையாகும். காலம் காலமாய் அமைதியாக மீன் பிடித்து கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படை எங்கள் மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆழ்கடலில் மீன் பிடிப்பு தொடர்பாக ரூ.1520 கோடி வழங்குவது பராமரிப்புக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி வழங்குவது தொடர்பாக நான் 3–6–2014, 7–8–2015 ஆகிய நாட்களில் அனுப்பிய கோரிக்கை இன்னும் மத்திய அரசின் ஒப்புதல் வராமல் கிடப்பில் உள்ளது.
பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்க்கை பிரச்சினையில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். இது போன்ற சூழ்நிலைகள் இனி மேலும் ஏற்பட மத்திய அரசு அனுமதிக்க கூடாது.
இந்த விஷயத்தில் தூதரக ரீதியாக நடவடிக்கை எடுத்து 14 மீனவர்களையும், 50 படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் படகு பழுதால் அங்கு பிடித்து வைக்கப்பட்டுள்ள 4 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment