Saturday, 28 November 2015

சரக்கு சேவை வரிவிதிப்பு மசோதா: காங்கிரசின் 3 நிபந்தனைகளில் இரண்டை மோடி ஏற்றார்


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் சரக்கு சேவை வரி விதிப்பு மசோதாவை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு (2016) ஏப்ரல் மாதம் 1–ந் தேதி முதல் இந்த மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு முயன்றது. ஆனால் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டதால் அந்த மசோதா இன்னமும் பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் உள்ளது. பாராளுமன்ற மேல் சபையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற இயலாது.
இந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, சரக்கு சேவை வரி நிறைவேற 3 முக்கிய நிபந்தனைகளை விதித்தார். இதையடுத்து காங்கிரசை சமரசம் செய்ய அருண்ஜெட்லியும், வெங்கய்யா நாயுடுவும் முயன்றனர். ஆனால் காங்கிரஸ் சமரசம் ஆகவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஒரு விழாவில் பிரதமர் மோடியும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் கலந்து கொண்டனர். அப்போது சரக்கு சேவை வரி விதிப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் நிறை வேற்ற உதவி செய்ய வேண்டும் என்று மன்மோகன்சிங்கிடம் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.
உடனே மன்மோகன்சிங், ‘‘இது பற்றி சோனியாவிடம் பேசி சமரசம் செய்கிறேன்’’ என்று மோடியிடம் உறுதியளித்தார். அதன் பிறகே பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் மளமளவென நடந்தன. திட்டமிட்டப்படி நேற்று மாலை டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள மோடி வீட்டுக்கு சென்று சோனியா சென்றார்.
மோடியும், சோனியாவும் சுமார் ஒரு மணி நேரம் பல முக்கிய விவரங்கள் குறித்து பேசினார்கள். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு உடனிருந்தனர். பேச்சு வார்த்தையின் போது சரக்கு சேவை வரி விதிப்பு மசோதா தொடர்பாக 3 நிபந்தனைகளை சோனியா தெரிவித்தார்.
அந்த 3 நிபந்தனைகள் வருமாறு:–
1.சரக்கு சேவை வரி விதிப்பு 18 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது.
2. உற்பத்தி மாநிலங்களுக்கு 1 சதவீத வரி விதிப்பை விலக்க வேண்டும்.
3. சரக்கு சேவை வரி விதிப்பு மசோதா கவுன்சில் அமைப்பிலும், மாநில இட ஒதுக்கீட்டிலும் மாற்றம் செய்ய வேண்டும்.
சோனியா பின் இந்த 3 முக்கிய நிபந்தனைகளில் முதல் 2 நிபந்தனைகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். சரக்கு சேவை வரி விதிப்பு மசோதா கவுன்சில் அமைப்பில் மாற்றங்கள் செய்ய பிரதமர் மோடி தயக்கம் காட்டுகிறார். எனவே அந்த ஒரு விஷயத்தில் மட்டும் இன்னமும் பா.ஜ.க..வுக்கும், காங்கிரசுக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாக வில்லை.
இதன் காரணமாக சரக்கு சேவை வரி விதிப்பு மசோதாவை நிறைவேற்றும் விவகாரத்தில் காங்கிரஸ் இறுதி முடிவை தெளிவாக வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேசி விட்டு, பதிலை தெரிவிப்பதாக சோனியா கூறியுள்ளார். பெரும்பாலும் அவர் சரக்கு சேவை வரி விதிப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற ஒத்துழைப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய சந்திப்பின் போது மற்ற மசோதாக்களை நிறைவேற்றுவது பற்றியும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை இடையூறு இல்லாமல் சுமூகமாக நடத்துவது பற்றியும் பேசப்பட்டது. அப்போது மோடி வேண்டுகோளை சோனியா ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே பாராளுமன்ற கூட்டம் அமைதியாக நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சரக்கு சேவை வரி விதிப்பு தொடர்பாக சோனியாவை மீண்டும் அழைத்து பேச மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை மத்திய மந்திரி அருண் ஜெட்லி உறுதி செய்தார்.
அருண் ஜெட்லி கூறு கையில், பாராளுமன்றம் சுமூகமாக நடக்கவும், மசோதாக்கள் நிறைவேற்றவும் யாரிடம் வேண்டுமானாலும் பேச்சு நடத்த மோடி தயாராக உள்ளார்’’ என்றார். பாராளுமன்ற விவாதங்களின் போது ஏற்படும் சிக்கல்களை தீர்க்க வெங்கய்யா நாயுடுவும், மல்லிகார்ஜுன கார்கேயும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை மூலம் பாராளுமன்றத்தில் நிலவி வரும் முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment