Thursday 12 November 2015

கடலூர் மாவட்டத்தை இயற்கைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ கோரிக்கை




ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களால் கடலூர் மாவட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் நாட்டிலேயே அதிக அளவு மழை கொட்டித் தீர்த்ததால், கடலூர் மாவட்டம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், வாழ்வாதரங்களையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளும், ஒன்றரை இலட்சம் கோழிகளும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் மட்டும் 39 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்ட மக்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு பல நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட பல இடங்களில் இருக்கும் மக்களுக்கு தங்கும் இடம், குடிநீர், உணவு கிடைக்காததால் அவர்கள் சொல்லோணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் அருகே து.மண்டபம் கிராம மக்கள் நான்கு நாட்களாக எந்தவிதமான உதவியும் கிடைக்காததால், சிதம்பரம் -காட்டுமன்னார்கோவில் சாலையில் நூற்றுக்கணக்கானவர் திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டத்தின் பல இடங்களிலும் அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று போராட்டத்தில் இறங்கும் மக்கள் மீது காவல் துறை ஈவு இரக்கமின்றி தடியடி நடத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கடலூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து, மின்சார விநியோகம், குடிநீர் வழங்கல் போன்றவற்றை போர்க்கால வேகத்தில் செயல்படுத்த வேண்டும். தொற்று நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
மழை வெள்ளத்துக்கு பலியானோர் குறித்து கணக்கெடுக்கும் அரசு அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 39 பேர் பலியாகி உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்திற்கு வெறும் 17 பேர் மட்டும் பலியானதாக தமிழக அரசு சார்பில் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மழைக்குப் பலியானோர் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தி, உயிர்ப் பலியானோர் குடும்பங்களுக்கு பத்து இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், விவசாயிகளுக்கு நெல் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும், வாழை, கரும்பு, சவுக்கு மற்றும் முந்திரி ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு ஒன்றரை இலட்ச ரூபாயும் இழப்பிடு வழங்க வேண்டும். கால்நடைகளை பறிகொடுத்தவர்களுக்கு மாட்டுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும், ஆட்டுக்கு ரூபாய் 10 ஆயிரமும், கோழி ஒன்றுக்கு 500 ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி குடும்பத்திற்கு 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும்.
கடலூர் மாவட்டம் 2004 இல் சுனாமியால் கடும் பாதிப்புக்கு உள்ளானது. 2011 இல் ‘தானே’ புயலால் பலத்த சேதத்தை சந்தித்தது. ஒவ்வொரு ஆண்டும் இயற்கைச் சீற்றம் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை ‘இயற்கை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக’ அறிவித்து, தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment