Monday 16 November 2015

உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன்: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை மக்களை சந்தித்து ஜெயலலிதா நேரில் ஆறுதல்


சென்னை நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மிதந்துவரும் நிலையில் சமீபத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மழை வெள்ளச்சேதங்கள் மற்றும் மீட்புப்பணி நிலவரங்களை இன்று பிற்பகலில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

முன்னதாக, இன்று காலை மழை, வெள்ள நிலவரம் தொடர்பாக சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, வீடு மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்

இதையடுத்து, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்றுவரும் வெள்ள நிவாரணப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் வருவதை அறிந்து கொட்டும் மழையும் பொருட்படுத்தாது ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஆய்வுக்கு பின்னர் ஆர்.கே.நகர் வீரராகவன் தெரு சந்திப்பில் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 

3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் கொட்டி தீர்த்து விட்டது. மழைநீர் தேங்கியுள்ளது என்பதை அறிந்தவுடன் அவற்றை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 48 மோட்டார் பம்புகள், 6 சூப்பர் சக்கர் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகரில் மட்டும் 48 இடங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இரவு பகல் பாராமல் அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் சில சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 

பொதுமக்களுக்கு உணவு, சுகாதாரமான குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன்- தமிழக அரசு இருக்கிறது. நிவாரண பணிகள் முறையாக நடைபெறும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தண்டையார் பேட்டையில் உள்ள இளைய முதலி தெரு, சேணியம்மன் கோவில் தெரு, எண்ணூர் நெடுஞ்சாலை, காரனேசன் நகர், எழில் நகர், பெரம்பூர், முத்தமிழ் நகர், வில்லிவாக்கம், சிட்கோ நகர், ஆயிரம் விளக்கு - ஜி.என்.செட்டி சாலை, கொளத்தூர், இரட்டை ஏரி சந்திப்பு, அண்ணா நகர், எம்.எம்.டி.ஏ. காலனி ஆகிய இடங்களையும் ஜெயலலிதா இன்று சென்று பார்வையிடுகிறார்.

No comments:

Post a Comment