Saturday 28 November 2015

தனிநபர் கடனில் தமிழ்நாட்டை முதலிடம் பிடிக்க வைத்தது தான் அதிமுக சாதனையா? பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேள்வி ?





பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
தமிழ்நாட்டில் பொருளாதார நிலை மற்றும் கடன்சுமை குறித்து இந்தியா ஸ்பெண்ட் (India Spend) என்ற பொருளாதார இதழ் வெளியிட்டுள்ள விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. தனிநபர் கடன் சுமையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருப்பதாக அந்த இதழ் தெரிவித்திருக்கிறது.
2010&11 முதல் 2014&15 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களின் கடன் அளவு, பொருளாதார செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி இந்திய அளவில் அதிக கடன் வைத்திருக்கும் மாநிலம் மராட்டியம் ஆகும். அம்மாநிலம் ரூ.3.38 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் பரப்பளவிலும், மக்கள் தொகை அளவிலும் மாறுபடுவதால் தனிநபர் கடனை அடிப்படையாகக் கொண்டு தான் மாநிலங்களின் கடன்சுமை அளவிடப்படுகிறது.
அதன்படி பார்த்தால் மராட்டியம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுமே சராசரியாக ரூ.29,000 கோடி தனிநபர் கடன்சுமையை வைத்திருக்கின்றன. அதேபோல், மற்ற மாநிலங்களின் கடன்சுமை சராசரியாக 66% அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் கடன்சுமை மட்டும் ஆய்வுக்கான 5 ஆண்டுகளில் 92% அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தின் வட்டிசுமையும் அதன் செலவில் 10.50% என்ற அளவிலிருந்து 11.60% ஆக அதிகரித்துள்ளது.
இவை அனைத்துமே 2014&15 வரையிலான கணக்குகள் ஆகும். 2015&16 வரையிலான ஐந்தாண்டு கணக்கைப் பார்த்தால் தமிழகத்தின் தனிநபர் கடன்சுமை ரூ.31,192 ஆக அதிகரிக்கும். பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.2.01 லட்சம் கோடி கடனையும் கணக்கில் கொண்டால் தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.60,766 ஆக அதிகரிக்கும். அதேபோல், தமிழகத்தின் வட்டி சுமையும் 12.52% ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும் தமிழகத்தின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் 108% ஆக அதிகரித்துள்ளது. அதிமுக அரசு பத்வியேற்கும் போது ஒரு லட்சத்து 1710 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன்சுமை இப்போது ரூ. 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடியாக அதிகரித்து விட்டது. அதாவது ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ.31,192 கடன்சுமை சுமத்தப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள ரூ.2.01 லட்சம் கோடி கடனையும் சேர்த்தால் தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதான கடன்சுமை ரூ.60,766 ஆக உயர்ந்திருக்கும்.
2011& ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் தமிழ் நாட்டை பன்முக சமூக,பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1,20,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். இந்தப் பிரத்தியேக திட்டங்களின் மூலம் தமிழ் நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலை நிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும் வழிவகை செய்யப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து ரூ.1,01,710 கோடி கடன் வாங்கப்பட்டிருந்த நிலையில், 5 ஆண்டுகளில் மட்டும் அதைவிட அதிகமாக ரூ.1,09,773 கோடி கடன் வாங்கி தமிழகத்தை மீளாக் கடன் துயரில் ஆழ்த்தியது தான் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனையாகும்.
ஒரு மாநில அரசு கடன் வாங்காமல் செயல்பட முடியாது என்பதை நான் அறிவேன். ஆனால், கடனாக வாங்கப்படும் தொகை மூலதனச் செலவுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் கடனாக வாங்கப்பட்ட ரூ.1,09,773 கோடி மூலதன செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் கண்ணுக்கு தெரியும்படியாக எந்த பெருந்திட்டமும் செயல்படுத்தப் பட்டதாக தெரியவில்லை.
அனைத்து துறைகளிலும் திட்டமிட்டு செய்யப்பட்ட ஊழல்கள், அவற்றை மக்கள் கண்டுகொள்ளாமல் இருக்க அறிவிக்கப்பட்ட இலவசத் திட்டங்கள் ஆகியவை தான் தமிழகத்தின் கடன் சுமை தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததற்கு காரணம் ஆகும். இந்தக் கடனுக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.17,856.65 கோடியை வட்டியாக செலுத்த வேண்டியிருக்கிறது. இது பள்ளிக்கல்வித்துறை தவிர மற்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட மிக அதிகம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
அதுமட்டுமின்றி, வட்டி செலுத்துவதற்காகவும், இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூ.30,446.68 கோடியை கடனாக வாங்கியிருக்கிறது. இவ்வாறு வட்டியைக் கட்ட கடன் வாங்கும் அவலநிலையில் தான் தமிழக அரசு தவித்துக் கொண்டிருக்கிறது.
இதேநிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கடனாளியாகவே பிறந்து கடனாளியாகவே உயிரிழக்கும் நிலை ஏற்படும். இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் தமிழகத்தை இவ்வளவு கடன்சுமை கொண்ட மாநிலமாக மாற்றிய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதை வரும் தேர்தலில் செய்து முடிக்க தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment