Saturday 21 November 2015

வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்! அரசுக்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்



வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை  கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்! என அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,


தமிழ்நாட்டில் புதிது புதிதாக நோய்கள் பரவி வருவதும், அந்த நோய்களுக்கு அப்பாவி மக்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதும் மிகுந்த கவலை அளிக்கிறது. ஆனால், பரவி வரும் நோய்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும்.
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான டெங்கு காய்ச்சல் ஆண்டு தோறும் தமிழகத்தில் பரவுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலையில் சென்னை மருத்துவமனைகளில் மட்டும் 545 பேர் டெங்கு காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு டெங்கு நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு மறுக்கிறது.
டெங்கு காய்ச்சலைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் நோயும் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் திருச்சி மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்நாளில் மட்டும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தீபா, கரூரைச் சேர்ந்த சந்திரா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஜாஹீர் ஹுசைன் ஆகிய 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே இந்த நோயின் தீவிரத்தை உணர முடியும். ஆனால், பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பன்றிக் காய்ச்சலுக்கு 10 நாட்களில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதைப்பற்றிக் கவலைப்படாத தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள்,‘‘ பன்றிக் காய்ச்சலுக்கு இப்போது பலம் குறைந்து விட்டது. பன்றிக் காய்ச்சல் என்பது மழைக் காலத்தில் வரும் சாதாரணக் காய்ச்சல் தான் என உலக சுகாதார நிறுவனமே அறிவித்து விட்டது. இதனால் பன்றிக் காய்ச்சலை நினைத்து அச்சப்படத் தேவையில்லை’’ என்று கூறியுள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது. பன்றிக் காய்ச்சலுக்கு தனி அறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் எந்த அரசு மருத்துவமனையிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இன்னும் பெரும்பாலான மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சாப்பிடுவதற்கான டாமிஃபுளு (ஜிணீனீவீயீறீu) மாத்திரைகள் கூட போதிய அளவில் இருப்பு வைக்கப்படவில்லை என்பது தான் உண்மை நிலையாகும்.
மற்றொரு பக்கம் மழை பாதிப்புகள் காரணமாக சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல்வேறு வகையான தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 1955 பேர் காய்ச்சலுக்காகவும், 113 பேர் வயிற்றுப் போக்குக்காகவும் சிகிச்சை பெற்று இருப்பதாக சென்னை மாநகராட்சி ஒப்புக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வட சென்னையிலுள்ள தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோயின் பாதிப்பு மிகஅதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்திலும் மழை சார்ந்த நோய்கள் வேகமாக பரவி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் மழை சார்ந்த தொற்று நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது நல்ல அறிகுறி அல்ல. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் போதிலும், அவை போதுமானது அல்ல.
குறிப்பாக பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான மருத்துவம் அளிக்கும் வசதிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்துவதுடன், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment