Sunday, 29 November 2015

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடி மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை வெள்ள நீரை உடனடியாக அகற்றவேண்டும். தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கவேண்டும். மழைவெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் தாமதமின்றி நிவாரணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மக்கள் நலக்கூட்டணி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகரில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கலைவேந்தன், முன்னாள் எம்.பி.அப்பாத்துரை ஆகியோர் தலைமை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.அழகுமுத்துபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தெற்கு&முரசுதமிழப்பன், மாநகர் செல்வக்குமார், வடக்கு கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுகவின் மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன் வரவேற்றார். 

ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தை ஆண்டுவருபர்களும், ஏற்கனவே ஆட்சி புரிந்தவர்களும் இயற்கை வளங்ளை பாதுகாக்க தவறியதின் விளைவினாலே இதுமாதிரியான இயற்கை சீற்றம் ஏற்பட்டு மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த 1992ம் ஆண்டு ஏற்பட்ட மழைக்கால பேரழிவுக்கு பின்பு இந்த 2015ம் ஆண்டு தான் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவிற்கு மக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளபோதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய அரசின் நிவாரணக்குழு பார்வையிட வரவில்லை. இவர்களை பார்வையிட வருமாறு மாநில அரசும் வலியுறுத்தவில்லை. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் தான் செய்யவேண்டிய கடமையை செய்யத் தவறியதை எடுத்துரைக்கவே மக்கள்நலக் கூட்டணி மூலமாக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழையினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள மக்கள் தங்களுக்கான நிவாரணங்களை அரசு தராத நிலையில் அதனைக்கேட்டு அறவழியில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்காக அப்பாவி மக்கள் மீது இந்த அரசு காவல்துறையை ஏவிவிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்த அரசானது விமர்சனத்தை ஏற்க விரும்புவதில்லை, ஏதாவது விமர்சனம் செய்தால் அவர்கள் மீது பொய்வழக்கு போடுவதும், அவதூறு வழக்கு தொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதற்கு சகிப்புத்தன்மை இல்லாதது தான் காரணமாகும். இருந்தபோதும் தமிழக அரசு மழைக்கால நிவாரணம் கேட்டு போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

தூத்துக்குடி பக்கிள் ஓடையை வரை படத்தில் உள்ளபடி குறுகலாக இல்லாமல் அகலமாக கட்டவேண்டும், உப்பாற்று ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். கொம்பாடி ஓடையில் வீணாகும் தண்ணீரை தடுத்து சேமித்திட தடுப்பணை கட்டுவதற்கு இந்த அரசை வலியுறுத்த வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது நிலமை அப்படி இல்லை, குறிபிட்டபடி அணை கட்டுவதற்கு இந்த அரசிற்கு காலஅவகாசம் இல்லை, ஏனெனில் வரும் தேர்தலோடு இந்த அரசிற்கு முடிவு கட்டப்பட்டு விடும். 

பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும் மாநில அரசு நீர்நிலைகளை பராமரிக்க முன்வரவில்லை. ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையில் மணலை அள்ளும் நோக்கத்தில் தான் இந்த அரசு தூர் வாரும் பணிகளை மேற்கொண்டது குறித்து நாங்கள் பசுமைத்தீர்பாயத்தில் எடுத்துரைத்தோம். இதன்மூலமாக தீர்ப்பாயம் அணையின் முதல், 2வது ரீச்களில் மட்டும் அமலைச்செடிகள் மற்றும் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.ஒன்றரை லட்சமும், நெல்பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25ஆயிரமும், மானாவாரி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரமும், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.25ஆயிரமும், ஒரளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20ஆயிரமும், இறந்த மாடுகளுக்கு ரூ.50ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.10ஆயிரமும், கோழிகளுக்கு ரூ.500 வீதம் நிவாரணம் வழங்கிடவேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்த அரசை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்.

இதன் அடிப்படையில் சேதாரங்களை கணக்கிட்டு அதற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்திடவேண்டும். தமிழக மழைவெள்ள சேதத்தினை ஈடுகட்ட மத்திய அரசு ரூ.10ஆயிரம் கோடி நிதி வழங்கிடவேண்டும் என்று நாங்கள் மாநில அரசை வலியுறுத்தியுள்ளோம்.

இதற்கேற்ப மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியானபடி சென்று சேர்ந்திட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரமுகர்கள், விவசாயசங்க பிரதிநிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைத்திட வேண்டும். அவர்களின் கண்காணிப்பிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் தவறுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்கமுடியும்.

தூத்துக்குடி மாநகரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்
தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்திடவேண்டும், மறியல்
செய்ததற்காக பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசியலில் மாற்றத்திற்கான அடையாளமாக திகழும் மக்கள் நலக்கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்டத்தினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக தான் மாறிமாறி ஆட்சி அமைக்கும் என்ற பார்மூலா எங்களால் இனி உடைபட்டுவிடும். வரும் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், மதிமுக நிர்வாகிகள் காசிராஜன், நிஜாம், ராசேந்திரன், எரிமலைவரதன், தனபால்ராஜ், வரதராஜன், சிவஞானவேல், வி.சி.நிர்வாகிகள்
தமிழ்இனியன், பூலான்பாண்டியன், செல்வகுமார், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ராஜா, பேச்சிமுத்து, சங்கரன், பெருமாள், ரவீந்திரன், முத்து, பூமயில் உட்பட மக்கள் நலக்கூட்டணியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment