Sunday 29 November 2015

தமிழகத்தில் மீண்டும் மழை ! வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: 24 மணி நேரத்தில் கன மழை


வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த நிலை, மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் நேற்று நிலைக்கொண்டிருந்த தாழ்வு நிலை, தற்போது வங்க கடலின் தென்மேற்கே இலங்கை கடற்கரையோரம் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலுக்கு தென்கிழக்கே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.  இது மேலும் வலுவடைந்து வங்கக் கடலின் தென்மேற்கே ஒரு புதிய தாழ்வழுத்த மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது.
இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வரும் 24 மணி நேரத்தில் மிதமானது முதல் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறினார்.
மேலும், திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாள்களும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்யும் என வானிலை மைய செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தைப் பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் தர்மபுரியில் குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பூதப்பாண்டியில் 4 செ.மீ, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை அருகேயுள்ள காட்டுப்பாக்கம் மற்றும் மகாபலிபுரத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment