தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 2 நாட்களில் மட்டும் 8 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
இந்த ஆண்டு தமிழகத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு பெருமழை பெய்ததையொட்டி மழைக்கால தொற்றுநோய் அதிகம் வர வாய்ப்பு உள்ளதை அறிந்த முதல்வர், தமிழ்நாடு முழுவதும் 1112 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனைகளும் சிகிச்சையும், நிலவேம்பு குடிநீரும் வழங்க உத்தரவிட்டார். மழைக்கால மருத்துவ முகாம்களிலும் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மழைக்கால தொற்றுநோய் பரவாமலிருக்க முதல்வரின் உத்தரவுப்படி, மேலும் கூடுதலாக அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவுகள் மூலம் 1061 இடங்களில் தமிழ்நாடு முழுவதும் 25.11.2015 முதல் 29.11.2015 வரை (5 நாட்கள்) நிலவேம்பு குடிநீர் வழங்க முகாம்கள் நடைபெற்று வருகிறது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையில் நிலவேம்பு குடிநீர் வழங்கி முகாமினை 25.11.2015 அன்று தொடங்கிவைத்தார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தொடங்கி வைக்கப்பட்டு தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் பருகி பயனடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் (25.11.2015 முதல் 26.11.2015) வரை சுமார் 8 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கியுள்ளனர்.
25.11.2015 அன்று 1,56,878 ஆண்களும், 1,48,221 பெண்களும், 49,494 குழந்தைகளும் ஆகமொத்தம் 3,54,593 பேரும், 26.11.2015 அன்று 11,89,387 ஆண்களும், 1,80,508 பெண்களும், 7,338 குழந்தைகளும் ஆகமொத்தம் 4,43,278 பேரும், இரண்டு நாட்களில் 7,97,771 பேர் நிலவேம்பு குடிநீர் பருகி பயனடைந்துள்ளனர். இந்த முகாம் 29.11.2015 (ஞாயிற்றுக்கிழமை) வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது.
பொதுமக்கள் தாங்கள் நிலவேம்பு குடிநீர் பருகியதோடு மட்டுமல்லாமல் பாத்திரங்களை எடுத்துவந்து தங்கள் குடுபத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், மாவட்ட, வட்டார, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சென்று நிலவேம்பு குடிநீரை பருகி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளொன்றுக்கு சுமார் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரை நிலவேம்பு குடிநீர் பருகி பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு மடங்காக நாளொன்றுக்கு 4 லட்சம் பேர் வரை வந்து நிலவேம்பு குடிநீர் பருகி செல்கின்றனர். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அமோக ஆதரவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment