Friday 27 November 2015

ஜெயலலிதாவின் சர்வதிகார நடவடிக்கை அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை! வைகோ கண்டனம்




எதேச்சதிகாரத்தின் மூலம் ஜனநாயக உரிமைகளை அழிக்க முயன்ற அனைத்து கொடுங்கோலர்களும் இருந்த இடம் தெரியாமல் அதிகாரத்தையும் இழந்து நிர்மூலமாகிப் போனார்கள் என்ற வரலாற்றின் படிப்பினையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உணரவே இல்லை.
1975 இல் இந்திரா காந்தி அம்மையார் ஏவிய நெருக்கடி நிலை சர்வதிகாரத்தால் அனைத்து மக்களின் கோபத்துக்கும் ஆளாகி, 1977 இல் ஆட்சி அதிகாரத்தை இழந்தார் என்ற படிப்பினையை முதலமைச்சர் ஜெயலலிதா யோசிக்கவே இல்லை என்பதால்தான், ஆனந்த விகடன் பத்திரிகையை தனது அதிகாரத்தைக் கொண்டு மிரட்டலாம், ஏன் முடக்கவும் முயலலாம் என்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
கடந்த நாலரை ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை, மக்கள் விரோத நடவடிக்கைகளை, அமைச்சர்களின் தவறான நடவடிக்கைகளை ஆனந்த விகடன் வார ஏடு ‘மந்திரி தந்திரி’ என்ற தலைப்பில் கடந்த இருபத்து ஒன்பது வாரங்களாக விமர்சனக் கட்டுரைகளாக தமிழக நலனைக் கருதி வெளியிட்டது.
நவம்பர் 25 ஆம் தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் “என்ன செய்தார் ஜெயலலிதா?” என்று முகப்பு அட்டையில் தலைப்பிட்டு முப்பதாவது கட்டுரையாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற அலங்கோலங்களை ஆணித்தரமான ஆதாரங்களோடு ஆனந்த விகடன் கட்டுரை படம்பிடித்துக் காட்டியது.
“என்னையே விமர்சிப்பதா?” என்ற ஆத்திரத்தில் ஆனந்த விகடன் பத்திரிகை ஆசிரியர் மீதும், வெளியீட்டாளர் மீதும், பதிப்பாசிரியர் மீதும் முதலமைச்சர் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கை ஆனந்த விகடன் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும்போது, ஆனந்த விகடன் கட்டுரைகளில் எழுத்தப்பட்டவை அனைத்தும் அப்பட்டமான உண்மைகள் என தமிழக மக்கள் அறிந்துகொள்ளத்தான் போகிறார்கள்.
ஆனந்த விகடன் ஏடு 1930 களில் எÞ.எÞ.வாசன் அவர்களால் தொடங்கப்பட்டு, கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பணியாற்றிய உன்னதமான ஏடாகும். விருப்பு வெறுப்பற்று நடுநிலையோடு தமிழ்நாட்டின் அரசியல், சமுதாயம், இலக்கியம், கலைகள் அனைத்துக்கும் அரிய சேவை செய்து தமிழக மக்களால் போற்றப்படுகிற ஏடாகும்.
விகடனின் முகநூல் (Facebook) பக்கமும் கடந்த 23 ஆம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. தற்போது விகடன் நிர்வாகம் புதிய முகநூல் பக்கத்தைத் தொடங்கிவிட்டது. இதனால் விகடன் முகநூல் வாசகர்கள் எண்ணிக்கை முன்னைவிட அதிகமாகும்.
முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆனந்த விகடன் இதழில் வந்த கட்டுரை துண்டுப் பிரசுரமாக தினமலர் உள்ளிட்ட நாளேடுகளின் நடுப்பக்கத்தில் வைத்து அனுப்பப்படக்கூடும் என்று எண்ணி, தமிழ்நாட்டின் பல இடங்களில் 25 ஆம் nதி அதிகாலையிலேயே தினமலர் ஏடுகளை எடுத்துச் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி, ஆளும் கட்சியினரும், காவல்துறையினரும் சோதனை செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தினமலர் ஏஜெண்டுகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
ஆளும் கட்சியினுடைய செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் காவல்துறையினரின் பக்க பலத்தோடு நாளிதழ் பார்சல்களைப் பிரித்து அத்துமீறி நடந்துள்ளனர். அதுமட்டுமல்ல, ஆளும் கட்சியினரும், காவல்துறையினரும் விற்பனையாளர்களை மிரட்டி தினமலர் நாளிதழ்களை மொத்தமாக வாங்கிச் சென்றுள்ளனர். நெருக்கடி நிலை காலத்தில் பத்திரிகைகளின் குரல் வளையை நெறித்தது போன்ற அக்கிரமமான நடவடிக்கைதான் இந்த அராஜகச் செயலாகும்.
பெருமழை பெருவெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் துயரத்தைப் போக்கும் விதத்தில் உரிய கடமை ஆற்றாத தமிழக அரசு, அரசின் குறைகளைச் சுட்டிக் காட்டும் பத்திரிகைகள் மீது அடக்குமுறையை ஏவி இருப்பது, நடப்பது ஒரு பாசிச ஆட்சி என்பதை நிருபிக்கிறது.
இதற்கு முன்னரும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்க அடக்குமுறையை ஏவி, விமர்சிப்போரை சிறையில் அடைத்து, அதன் விளைவாக ஆட்சியையே பறிகொடுத்த பின்னரும் அவர் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அவர் ஒருபோதும் திருந்தவே மாட்டார் என்பதற்கு சாட்சியம்தான் தற்போதைய முதல்வரின் நடவடிக்கைகள்.
ஜனநாயகத்தை நசுக்க முனைந்த அனைவரும் மக்களால் தூக்கி எறியப்பட்டனர். அத்தகைய விபரீதத்தை முதலமைச்சர் விலைகொடுத்து வாங்குகிறார். தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, ஆனந்த விகடன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்றும், பத்திரிகைகளின் மீதான மிரட்டலை முற்றாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment