Saturday 14 November 2015

மழை பாதிப்பு பகுதிகளில் திடீர் ஆய்வு: நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவு



கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்களின் தலைமையின்கீழ் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரணம், மின் சீரமைப்பு, நலத்திட்ட உதவிகள் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை ஒருங்கிணைப்பு செய்து, கண்காணித்து, துரிதப்படுத்திட நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணப் பணிகளை விரைவுபடுத்திட உத்தரவிட்டுள்ளார்.

இன்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமாள் ஏரிப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். ஏரியின் கொள்ளளவு 5.9 அடியாகும். தற்போது 520 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வரத்து 1380 கனஅடியாக உள்ளது. ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2750 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் கரையில் சிறிதாக ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து பூவாணிக்குப்பம், தீர்த்தனகிரி ஊராட்சிப் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை போன்றவைகளை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டார். பின்னர் நெற்பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதை பார்வையிட்டார்.  பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு ஊழியர்கள் மூலம் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து குண்டியமல்லூர் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் சேதங்களையும், சாலை மற்றும் தரைப்பாலம் சேதமடைந்துள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையும், மின்சாரம் உடனடியாக சீரமைக்கப்பட்டதையும் பார்வையிட்டார்.

கொத்துவாச்சாரியில் ஏற்கனவே மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளதால் ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையினை பார்வையிட்டார். மேலும், இப்பகுதி ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையினை பொதுப்பணித்துறை மூலம் அகற்றிட உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அரசுச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சித்தலைவர் சுரேஷ்குமார், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ஆர்.இராஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

No comments:

Post a Comment