சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக சுவாமி தரிசனம் செய்யும் நேரம் ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1-ம் தேதி நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கடந்த 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் புதிய மேல் சாந்தி சங்கரன் நம்பூதிரி தலைமையில் பூஜை நடைபெற்று வருகிறது.
இனி வரும் நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலையில் 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு வந்தது. தற்போது 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் இனிமேல் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். கேரள போலீசாரால் ஏற்படுத்தப்பட்ட ஆன்லைன் தரிசன முன் பதிவுக்கு இதுவரை 12 லட்சம் பேர் முன் பதிவு செய்து இருக்கிறார்கள்.
ஆன்லைன் தரிசன முன் பதிவு முற்றிலும் இலவசமாகும். இவ்வாறு முன் பதிவு செய்து வரும் ஐயப்ப பக்தர்கள் வழக்கமான பக்தர்களின் வரிசையில் காத்து நிற்காமல், வலிய நடை பந்தலில் உள்ள சிறப்பு வரிசை மூலமாக விரைவில் சாமி தரிசனம் செய்ய முடியும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் ஐயப்ப பக்தர்கள், பம்பையில் உள்ள சிறப்பு சேவை மையத்தில் முன் பதிவு செய்து, பதிவிறக்கம் மூலம் பெறப்பட்ட சான்று நகலை காட்டி சிறப்பு கூப்பன் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment