தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் இனப்படுகொலை அழித்தொழிப்பில் இருந்து தப்பி தாய் தமிழகத்துக்கு வருகிற ஈழத் தமிழ் உறவுகளில் சிலர் சட்டங்களை மீறியதற்காக கைது செய்யப்பட்டு அடைக்கப்படுகிற இடமாக சிறப்பு முகாம்கள் இருந்து வருகின்றன.
ஆனால் இப்படி கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு அவர்கள் உரிய தண்டனை காலத்துக்குப் பின்னர் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து கொட்டடி முகாம்களிலேயே அடைத்து வைக்கப்படுகின்றனர். செங்கல்பட்டு,பூவிருந்தவல்லி, திருச்சி சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழ் உறவுகள் தங்களை விடுதலை செய்யக் கோரி பல கட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்; அண்மையில் கூட திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் தம்பதியினர் தற்கொலைக்கும் முயன்றிருக்கின்றனர்.
இத்தகைய சிறப்பு முகாம்களை இழுத்து மூடி இதில் உள்ள ஈழத் தமிழ் உறவுகளை பொதுமுகாம்களிலோ அல்லது அவர்கள் விரும்புகிற வெளிநாட்டுக்கு சிறப்பு நேர்வின் அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் மத்திய அரசு இந்த சிறப்பு முகாம்களை மூடுவதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
இந்திய தேசத்துடன் தொப்புள் கொடி உறவே இல்லாத திபெத்திய அகதிகள் இந்த மண்ணில் சொர்க்க வாழ்க்கை வாழ்கிற போது எங்கள் தொப்புள் கொடி உறவாகிய ஈழத் தமிழ் உறவுகள் அகதிகளாக வந்த போதும் நரக வாழ்க்கை வாழுகிற அவலம் நீடித்துக் கொண்டிருக்கிறது. திபெத்திய அகதிகளுக்கு காட்டும் கரிசனையை தமிழீழ உறவுகளுக்கு இந்திய அரசு ஒரு நாளும் காட்டியதும் காட்டப்போவதில்லை. ஈழத் தமிழ் அகதிகளுக்கு மாநில அரசுதான் அத்தனை உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் சிறப்பு முகாம்கள் என்ற போர்வையில் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அத்தனை ஈழத் தமிழ் உறவுகளையும் உடனே பொதுமுகாம்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அவர்கள் விரும்புகிற வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும்!
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு முகாம்களையும் நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும்!
ஆகிய கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 24-ந் தேதியன்று திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்த உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார். மேலும் இந்த செய்தியை கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான செயல்வீரர்கள் கூட்டத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment