கரூர் திருக்குறள்
பேரவையின் முப்பெரும் விழா கரூர் நகரத்தார் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு
திருக்குறள் பேரவை தலைவர் புளியம்பட்டி இராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் மேலை.பழநியப்பன்
அனைவரையும் வரவேற்றார். அப்பர் அடிப்பொடி ச.திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டு ஓதுவார் ஜெகந்நாதர் தொகுத்த படித்திட பலன் தரும் பதிக மருந்துகள் என்ற நூலையும்,
பொறியாளர் தே.ஹெலினா எழுதிய திருக்குறள் புதிய உரைகள் என்ற நூலையும், மேலையாரின் குறள்
பாட்டு – தூய தமிழ் பெயர்கள் குழந்தைகளுக்கு இடுதல் என்ற நூல்களையும் வெளியிட்டு, தொழிலதிபர்
சாதனை விருது பெற்ற, கரூர் திருக்குறள் பேரவையின் புரவலர் பி.டி.கோச் தங்கராசு விடம்
வழங்கினார். விழாவில் து.ரா.பெரியதம்பி, முனைவர் கடவூர் மணிமாறன், புலவர் குறளகன் ஆகியோர்
விழாவிற்கான பாராட்டுரை வழங்கினார்கள். சிறப்புரையாற்றிய அப்பர் அடிப்பொடி ச.திருநாவுக்கரசு
வெளியிடப்பட்டிருக்கிற திருமுறை நூலான படித்திட பலன் தரும் பதிக மருந்துகள் மிகச் சிறப்பாகவும்,
விளக்கமாகவும் தொகுக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு இறை திருவிளையாடல்களும் இந்நூலில்
இடம்பெற்றிருக்கிறது. இந்த நூலை ஓவ்வொருவரும், படிப்பதன் மூலம் விலை மதிப்பற்ற திருமுறைகளின்
அற்புதமான பலன்களும், கிட்டும் என்றார். மேலும் பாராட்டு பெறுகின்ற தொழில் அதிபர் பி.டி.கோச்
தங்கராசு மனித நேயமிக்கவர், நல்ல உழைப்பாளி, பல புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பவர்.
இயற்கை வேளாண்மையில் ஈடுபாடு கொண்டவர். இந்த பாராட்டுக்கு தக்கவராக இருக்கும் அவரை
நானும் பாராட்டுகிறேன் என்றார். தொடர்ந்து கரூவூரில் உள்ள நல வாழ்வு மையம், தமிழ் ஆர்வலர்
கூட்டமைப்பு, தமிழ் சங்கம், பொது சமய சன்மார்க்க சங்கம், லயன்ஸ் சங்கங்கள் ஆகியவற்றின்
சார்பில் பி.டி.கோச்.தங்கராசு விற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தொழிலதிபர்
பி.டி.கோச். தங்கராசு வின் வாழ்க்கை வரலாறு ஒளிக்காட்சியாக காண்பிக்கப்பட்டது. ஏற்புரையாற்றிய
பி.டி.கோச். தங்கராசு தன்னுடைய ஏற்புரையில் 50 ஆண்டுகளாக தொழில் துறையில் ஈடுபட்டு
வந்த நான் தற்போது கல்வி, இலக்கியம், இயற்கை வேளாண்மை இவற்றை நாட்டம் செலுத்தி வருகிறேன்.
எனது மனதிற்கு இதம் தருவது நல்ல நூல்களும், இலக்கிய அமைப்பினுடைய விழாக்களும், அமைப்பினரும்
ஆவார்கள். ஒரு கையில் திருக்குறளும், மற்றொரு கையில் களப்பையும் தூக்கினால் இந்தியா
மிக விரைவில் உலக அரங்கில் முதலிடம் பெறும் என்றார். இவ்விழாவில் பி.டி.கோச் தங்கராசு
வின் குடும்பத்தினர், உறவினர்கள், அரிமா சங்கத்தை சார்ந்தவர்கள், இலக்கிய அமைப்பை சார்ந்தவர்கள்,
ஆன்மீக பேரவைகளை சார்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மேலும் விழாவில் நம்
குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயர் இட வேண்டுமெனவும், கடைகள் அதாவது அங்காடிகளுக்கும்
நல்ல தமிழ் பெயர் இட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. முன்னதாக மறைந்த மக்களின் குடியரசுத்
தலைவர் அ.ப.செ.அப்துல் கலாமின் படத்தை லயன் ஆர்.சேதுராமன் திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment