Tuesday, 18 August 2015

ம.தி.மு.க வை தொடர்ந்து தி.மு.க வும் கண்டனம் - சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டிய ஆளும் கட்சியினர் வெறியாட்டம் போடலாமா? கருணாநிதி கண்டனம்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு ஆங்காங்கே உருவ பொம்மை எரிப்பு, கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் ஆகிய சம்பவங்களை தொடர்ந்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ கண்டனம் தெரிவித்ததோடு, தி.மு.க தலைவர் கருணாநிதியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய ஆளும் கட்சியினரே சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் நெசவாளர் தின நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். இந்த நிகழ்வை, அநாகரீக வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இதையடுத்து அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் போராட்டங்கள் பல்வேறு போராட்டங்களை அறவழியில் நடத்தாமல், அராஜகமாக நடத்தியும், இளங்கோவனின் கொடும்பாவியை எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். 
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னணியினரே ஆங்காங்கு ரகளையிலும், வன்முறையிலும் ஈடுபட்டுள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு மரபுகளைப் பற்றிக் கவலைப்படாமல், முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கே சென்று விருந்தில் கலந்து கொண்டது பற்றி, அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் விமர்சனம் செய்ததைப் போல, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார். பல்வேறு நிகழ்வுகளில் அ.தி.மு.க. வினர் நாகரிகம் மற்றும் பண்பாட்டு எல்லைகளையெல்லாம் மீறி செய்யாத விமர்சனங்களா? இளங்கோவன் தெரிவித்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அ.தி.மு.க. ஆட்சியினர் வழக்கம் போல, "அவதூறு வழக்கு" தொடுக்கலாம், அல்லது அவரது கருத்துக்கு மாறுபட்டு ஜனநாயக ரீதியாகக் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் அதற்கு முற்றிலும்மாறாக, நாட்டிலே சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே உள்ள ஆளுங்கட்சியினரே, சட்டத்தைத் தங்கள் கையிலே எடுத்துக் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிற்கும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டிற்கும் சென்று வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதும், அவருடைய உருவ பொம்மையை எரிப்பதும் யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. அதிலும் அ.தி.மு.க. வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர், சட்டப் பேரவை உறுப்பினர்கள், மற்றும் முன்னணியினரே, முதல் அமைச்சரின் கண்ணிலே தங்களுடைய விசுவாச வேலைகள் பட வேண்டும் என்பதற்காகவே இத்தகைய அநாகரிகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரும் இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடிய வகையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் வேலியே பயிரை மேயும் விபரீதத்திற்கு ஒப்பானதாகும். அ.தி.மு.க.வினரின் இத்தகைய வன்முறைச் செயல்களை தி.மு. கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment