அதிபர் ஆட்சி முறை கொண்ட இலங்கையில் பிரதமரையும், எம்.பி.க்களையும் தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது.
இந்த தேர்தலில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி, தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியது.
மொத்தம் உள்ள 196 தொகுதிகளில் 100 சுயேச்சைகள் உள்பட 6151 பேர் போட்டியிட்டனர். இதில் ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் வேட்பாளராக ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் நிறுத்தியது. இதே போல் பிரதமர் பதவியை கைப்பற்ற ராஜபக்சேவும் போட்டியிட்டார்.
வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் நேற்று இரவே ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது.
இலங்கையில் வடக்கு, வடமேற்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு உள்பட 9 மாகாணங்களும், அதில் 25 மாவட்டங்களும் அடங்கியுள்ளன. மாவட்ட வாரியாக ஓட்டுக்கள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அடுத்து ஓட்டுப் பெட்டிகளை பிரித்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
தொடக்கத்தில் ரனில் விக்ரமசிங்கேயும், ராஜபக்சேவும் சரிசமமான நிலையில் இருந்து வந்தனர். இதனால் இழுபறி நிலை ஏற்பட்டது.
அதன் பிறகு ரனில் விக்ரமசிங்கே தொகுதி அடிப்படையில் பின் தங்கி இருந்தாலும் சதவிகித அடிப்படையில் முன்னணி வகித்தார்.
பகல் 12.30 மணி நிலவரப்படி ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி 38 இடங்களையும், ராஜபக்சேயின் இலங்கை சுதந்திரா கட்சி 42 இடங்களையும் கைப்பற்றியது.
ஓட்டு விகிதாச்சார அடிப்படையில் ரனில் விக்ரமசிங்கே முன்னணி வகிக்கிறார். அவர் 46 சதவீதத்தை தாண்டியுள்ளார்.
ராஜபக்சேக்கு விகிதாச்சார அடிப்படையில் 43.57 சதவீதம் வாக்குகளே கிடைத்துள்ளது. ரனில் விக்ரமசிங்கே தொடர்ந்து முன்னணியில் இருப்பதால் அவர் மீண்டும் பிரதமர் ஆகிறார்.
இன்று மாலை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் ரனில் விக்ரமசிங்கே பிரதமராக பதவி ஏற்பார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதவி ஏற்பு விழாவில் ஜனாதிபதி சிறிசேனா கலந்து கொள்கிறார். அவரது முன்னிலையில் இலங்கையின் 15–வது பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக் கொள்கிறார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 14 தொகுதி முடிவுகள் வெளியானதில் 7 தொகுதியை அக்கட்சி கைப்பற்றியுள்ளது.
மேலும் 7 தொகுதியில் முன்னணி வகிக்கிறது. விகிதாசார அடிப்படையில் 4.72 சதவீத வாக்குகளை பெற்று இருக்கிறது.
No comments:
Post a Comment