Friday, 16 October 2015

டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்! பா.ம.க நிறுவனர் இராமதாசு கோரிக்கை


பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைக் காரணம் காட்டி டீசல் விலை லிட்டருக்கு 95 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ளூர் வரியுடன் சேர்த்து ஒரு லிட்டர் டீசல் விலை 46.08 ரூபாயிலிருந்து 99 காசுகள் அதிகரித்து 47.07 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுகிறது. தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகத் தவறான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்தும் மக்களில் பெரும்பான்மையானோர் எதிர்ப்புக் குரல் எழுப்பாத ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் என்பதால் அவற்றின் மீது வரிக்கு மேல் வரி விதித்து விலையை உயர்த்தும் அணுகுமுறையை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பயன்களை முழுமையாக மக்களுக்கு வழங்காத எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது மட்டும் அதன் சுமையை மக்கள் மீது சுமத்துவது மக்கள் விரோத அணுகுமுறை ஆகும்.
உதாரணமாக கடந்த ஒன்றாம் தேதி டீசல் விலை உயர்த்தப்பட்ட போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 46.33 டாலராக இருந்தது. அதன்பின் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்தாலும் கடந்த 14ஆம் தேதி 46.86 டாலராக குறைந்து விட்டது. இந்த விலையேற்றம் எரிபொருள் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே தான் பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேபோல், டீசல் விலையேற்றத்தையும் தவிர்த்திருக்கலாம். ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வு விகிதத்தை விட அதிகமாக டீசல்விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதெல்லாம் அதே அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. உதாரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இன்று வரை கச்சா எண்ணெய் விலை 51% குறைந்து இப்போது 46.86 டாலராக உள்ளது. மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் நியாயமாக நடந்திருந்தால், பெட்ரோல், டீசல் விலையும் அதே அளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால்,பெட்ரோல் விலை 8% மட்டுமே குறைந்து ரூ.61.46 ஆக உள்ளது. டீசல் விலை 18% மட்டுமே குறைந்து ரூ.47.07 ஆக உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவின் பயன்களை எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு வழங்காதது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் பெட்ரோல் மீதான கலால் வரி இரு மடங்காகவும், டீசல் மீதான கலால் வரி மும்மடங்காகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் அதனால் ஏற்படும் தாக்கங்களை மத்திய அரசு அதன் வரியை குறைத்துக் கொண்டோ, எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் லாபத்தை குறைத்துக் கொண்டோ தான் சமாளிக்க வேண்டும். அதை விடுத்து அளவுக்கு அதிகமான சுமையை மக்கள் மீது சுமத்துவதை மக்கள் நலனில் அக்கறையற்ற செயலாகத் தான் பார்க்க முடியும். குறிப்பாக, பருப்பு வகைகளின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருக்கிறது. வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இத்தகைய செயலில் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது அத்தியாவசியப் பொருட்களின் விலையை எட்டாத உயரத்திற்கு இழுத்துச்செல்லும்.
எனவே, டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, டீசல் விலை நிர்ணய உரிமையை மீண்டும் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment