சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பாக தலைமறைவாக உள்ள யுவராஜ் பற்றிய விவரங்களை அவரது நண்பரும், பேரவை பொறுப்பாளருமான, பிரபு என்பவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ரகசிய இடத்தில் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பிரபு (வயது-33). இவர் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் வைகுந்தம் பகுதி நிர்வாகியாவார். இவர் வியாழக்கிழமை மாலை சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள துணிக்கடைக்கு மனைவி காயத்ரி, மாமியார் பூங்கொடியுடன் வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு, அனைவரும் அருகிலுள்ள உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, பிரபுவுக்கு செல்போனின் பல அழைப்புகள் வந்துள்ளது. இதைதொடர்ந்து, தனக்கு ஒரு மணி நேரம் வேலை இருப்பதாகவும், நீங்கள் இருவரும் வீட்டுக்குச் செல்லுங்கள் என மனைவி காயத்ரியிடம் கூறிவிட்டுச் சென்ற பிரபு வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காயத்ரி நேற்று அழகாபுரம் காவல் நிலையத்தில், தனது கணவரை காணவில்லை. அவரது செல்லிடப்பேசியைத் தொடர்பு கொண்டால், வேறு நபர்கள் பேசுகிறார்கள், அவரை யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் எனப் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபுவை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பிடித்துச் சென்று, தனி இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பாக தேடப்பட்டுவரும் யுவராஜின் நெருங்கிய நண்பராக பிரபு இருந்துள்ளார். தலைமறைவான யுவராஜ் பலமுறை செல்லிடப்பேசி மூலம் பிரபுவிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், பிரபு மூலம்தான் யுவராஜ் வாட்ஸ் அப் தகவல்கள், கடிதங்களை வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பிரபுவுக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள எலச்சிபாளையத்தை சேர்ந்த கிரி என்கிற கிரிதரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்செங்கோட்டில் நிதி நிறுவனம் நடத்திவரும் இவர் மூலம்தான் தலைமறைவாக உள்ள யுவராஜுக்கு தேவையான நிதி உதவிகள் சென்று வருவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து இவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அதேபோல, வழக்குரைஞர்களுக்கும், உறவினர்களுக்கு சென்று தகவல் சொல்லி செல்போன் எண்களை பரிமாற்றம் செய்த பலாப்பாளையம் என்ற ஊரை சேர்ந்த சுரேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். யுவராஜ் செல்போன் மூலம் சொல்லும் தகவல்களையும், அவர் தற்சமையம் பயன்படுதிவரும் செல்போன் எண் எது என்ற விவரத்தையும் இவர்தான் மற்ற ஊர்களுக்கு நேரில் சென்று யுவராஜின் நண்பர்களுக்கு தகவல் சொல்லி வந்துள்ளார்.
யுவராஜ் தலைமறைவான பத்து நாட்களுக்கு பிறகு இவரை பிடித்துக்கொண்டு போன திருச்செங்கோடு போலீசார் விசாரணைக்கு பிறகு விட்டுவிட்டனர். ஆனாலும், சுரேஷ் தொடர்ந்து யுவராஜின் தொடர்பிலேயே இருந்துள்ளார். தற்போது, சுரேசும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment