ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
கோடானு கோடி இளைஞர்களின் இதய பீடத்தில் நீங்கா இடம் பெற்று இருக்கும் மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 84 ஆவது பிறந்த தினம் அக்டோபர் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடல் அலைகள் தாலாட்டும் இராமேÞவரம் புனித மண்ணில் ஏழை கடலாடி குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள், இந்தியக் குடியரசுத் தலைவர்களிலேயே தனித்தன்மை வாய்ந்தவராகவும், மக்கள் மனம் கவர்ந்தவராகவும் இமாலயப் புகழை ஈட்டினார்.
உயர்ந்த இலட்சியத்திற்காக கனவு காணுங்கள் என்று இளைஞர்களையும், மாணவர்களையும் வழி நடத்திய அப்துல கலாம் அவர்கள், தமிழ்ப் பண்பாட்டின் அறநெறிகளையும், உலகப் பொதுமறை திருக்குறளின் வாழ்வியல் தத்துவங்களையும் தன் இறுதி மூச்சு உள்ளவரை வலியுறுத்திப் பேசி வந்தார்.
2010 ஆம் ஆண்டு அப்துல் கலாம் அவர்களின் 79 ஆவது பிறந்தநாளன்று, அக்டோபர் 15 ஆம் தேதியை ‘உலக மாணவர் தினம்’ என்று அறிவித்து, ஐ.நா. மன்றம் தனக்கு பெருமை தேடிக்கொண்டது.
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளில் தமிழக இளைஞர்களும், மாணவர்களும் இலட்சிய ஏறுகளாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment