தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
’’தமிழகத்தில் புயல் காரணமாக கனமழை கொட்டும், சூறாவளி காற்று வீசும், பலத்த சேதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் பல நாட்களாக எச்சரித்தும், தமிழக அரசின் மெத்தனத்தால் கடலூர் மாவட்டத்தில் 17பேர் உயிரிழந்ததற்கு முழு பொறுப்பையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இயற்கையின் சீற்றத்தை தடுக்க முடியாது என்றாலும், அதிமுக அரசு முன் எச்சரிக்கையுடன் சமயோசித நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்திருக்க முடியும். தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக தற்போது நிவாரணம் வழங்குகிறேன் என்ற அறிவிப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை. சாலைகள் துண்டிக்கப்பட்டு, மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் குடிநீர் மற்றும் உணவு இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான நிவாரணங்கள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றர். ஏற்கனவே "தானே" புயல் பேரழிவை பார்த்த பின்பும் தமிழக அரசும் பாடம் கற்று கொள்ளவில்லை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் வாழ்ந்த பகுதிகளில் 10பேர் உயிரிழந்துள்ளது பேரதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.
அவர்கள் வசித்த பகுதி தாழ்வாக இருப்பதையும் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதையும் அறிந்துள்ள மாவட்ட நிர்வாகம் அவர்களை உரிய நேரத்தில் வெளியேற்றி இருந்தால் இந்த சம்பவம் நடைபெற்று இருக்காது. நிவாரண தொகை கொடுத்தாலும் அவர்களை உயிருக்கு ஈடாகுமா? எதிர்பாராமல் விபத்தில் உயிரிழக்கலாம். ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
குளு,குளு கோடநாட்டில் இருந்து சென்னைக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளதைப் போல் ஒரு மாயதோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். உண்மையில் அங்கே எவ்வித நிவாரணப் பணிகளும் நடைபெறுவதாக தெரியவில்லை. எவ்வித நிவாரணங்களும் மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவையான குடிநீர், உணவு, உடை, அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். மழை இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என சொல்லப்படுகிறது. அதிலும் மக்கள் பாதிக்காத வண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன். மேலும் உயிரிழந்த 17பேர் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்குகிறேன். இத்தொகை சிதம்பரத்தில் தேமுதிக சார்பில் நடைபெறும் மக்களுக்காக மக்கள் பணி பொதுக்கூட்டத்தில் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.’’
No comments:
Post a Comment