பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
2016 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளன. உச்சநீதிமன்றத் தடையால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் ஏறுதழுவல் போட்டி தமிழர்களின், குறிப்பாக மதுரை உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய மாவட்ட மக்களின் வீரத்துடன் சம்பந்தப்பட்டதாகும். கடந்த 8 ஆண்டுகளாகவே இப்போட்டிக்கு பல்வேறு தரப்பிலிருந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்ட போதிலும், அவற்றை சமாளித்து போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.
ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்தது. அத்தடையை நீக்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காததால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியவில்லை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பல நூற்றாண்டுகளாக தமிழர் திருநாளையொட்டி பரபரப்பாக காணப்பட்ட பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட நகரங்களின் வாடிவாசல்கள் மட்டுமின்றி, அப்பகுதி மக்களின் முகங்களும் கடந்த ஆண்டு தான் முதல்முறையாக களையிழந்தன.
ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் திருநாள் இந்த ஆண்டுடன் முடிந்த கதையாக இருக்கட்டும்... வரும் ஆண்டில் வழக்கம் போல ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் குரலாக உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால் அதை இரு வழிகளில் மட்டுமே நீக்க முடியும். அவற்றின் முதலாவது உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து தடையை அகற்றுவதாகும். இரண்டாவது நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதன்மூலம் இப்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் இந்த போட்டிகளை நடத்த எந்த வகையிலும் சட்ட சிக்கல் ஏற்படாமல் தடுப்பது ஆகும். ஆனால், இந்த இரு வழிகளில் எந்த வழியிலும் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த பொங்கல் திருநாளுக்கு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாததற்கு காரணம் தமிழக அரசு தானே தவிர வேறு யாரும் இல்லை. 2014 ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்து உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைத்திருக்க வேண்டும். ஆனால், பெயரளவில் சீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசு, அதை விரைவாக விசாரிக்கும்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் முறையிடவில்லை. அதனால் தான் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு சாதகமாக எந்தவித தீர்ப்பையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கவில்லை.
காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை மத்திய அரசு இன்னும் நீக்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இவ்வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்தாலும் சாதகமான பலன் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதன் மூலம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த முடியும். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த யோசனையை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்தேகரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை; எந்த வகையிலும் அழுத்தம் தரவில்லை.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே சட்டத் திருத்தத்தை மேற்கொண்டால் மட்டுமே வரும் ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியும். பொங்கல் திருநாளுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுதொடர்பாக தெளிவான உத்தரவாதம் அளிக்கப்பட்டால் தான் பொதுமக்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஜல்லிக்கட்டுக்கு தயாராக முடியும்.
எனவே, இது தொடர்பான உத்தரவாதத்தை அளிப்பதுடன், வரும் கூட்டத்தொடரில் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment