நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தகோரி கடந்த 20–ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தந்து வருகின்றனர். மேலும்
கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தொ.மு.ச. தலைவர் திருமாவளவன் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. எனவே, ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.
அதன் பிறகு என்.எல்.சி. நிர்வாகம் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை எனவே, தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
நேற்று முன்தினம் முதல் நெய்வேலியில் காலவரையற்ற உண்ணா விரதத்தை தொடங்கினர். 77 தொழிலாளர்கள் உண்ணாவிரதமிருந்தனர். 2–வது நாளான நேற்று மத்தியாஸ், சண்முகம் என்ற 2 தொழிலாளர்கள் உண்ணாவிரத பந்தலில் மயக்கமடைந்தனர். இதை தொடர்ந்து மேலும் ஒரு தொழிலாளி மயக்கமடைந்ததாக தகவல் வந்துள்ளது. உடனடியாக அவர்களை பிற தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
உண்ணாவிரதமிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை உண்ணாவிரத பந்தலில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக பேசினார். நிகழ்ச்சி முடிவில் என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ம.தி.மு.க. வின் ஆதரவு தொடரும் என கூறினார்.
இன்று (16–ந்தேதி) காலை 11 மணிக்கு நெய்வேலி இல்லத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு என்.எல்.சி. நிர்வாகம் அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று தொழிற்சங்கத்தினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வருகிற 18–ந்தேதி சாலை மறியலும், 22–ந்தேதி கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், மந்தாரகுப்பம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய 6 இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். மேலும்
என்.எல்.சி. தொழிலாளர்கள் இன்று 28–வது நாளாக வேலைக்கு செல்ல வில்லை. எனவே, என்எல்.சி.யின் மின் உற்பத்தியில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் மொத்த மின் உற்பத்தி 2990 மெகாவாட். இன்று 2285 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. இது மொத்த மின் உற்பத்தியில் 705 மெகாவாட் குறைவாகும். இப்படியே சென்றால் மின் உற்பத்தி குறைவதோடு, போராட்டத்தின் நிலைமையும் தீவிரடையும் என அத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment