தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2011 ம் வருடம் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க. நாங்கள் வெற்றி பெற்றால் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு லேப்–டாப் வழங்குவோம் என்று அறிவித்தது.
அதே போல புதுவையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்யிட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் இலவச மிக்சி, கிரைண்டர் லேப்–டாப் வழங்குவோம் என அறிவித்தது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. புதுவையில் என்ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, லேப்–டாப் ஆகியவற்றை ஏற்கனவே வழங்கி வருகிறது.
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் அரசு இப்போது முதன் முதலாக மிக்சி, கிரைண்டர், லேப்–டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது.
இதன்படி 3 லட்சத்து 37 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கப்படுகிறது. அதே போல் கடந்த 2 ஆண்டில் பிளஸ்–2 படித்து முடித்த 12 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு லேப்–டாப் வழ்கப்படுகிறது.
இதில் மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்ட தொடக்க விழா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் துறையின் தொடக்கவிழா ஆகியவை சாரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை அலுவலக வளாகத்தில் நடந்தது.
விழாவுக்கு அமைச்சர் ராஜவேலு தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் ரங்கசாமி துறையின் பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டரை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:– பிற்படுத்தப்பட்டோருக்கு தனியாக துறை, புதிய திட்ட தொடக்கவிழா என இரண்டு விழா ஒரே மேடையில் நடக்கிறது. சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களுக்கு செயல்வடிவம் அளித்து வருகிறோம்.
ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்திலும் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுகிறோம். மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு முனைப்போடு உள்ளது. குறிப்பாக புதுவை மக்களில் பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினரும் 75 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். அவர்கள் தனியாக துறை வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
அது நியாயமான கோரிக்கை. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதன் அடிப்படையில் நலத்துறை தொடங்கப்பட்டுள்ளது. சமூகநலத்துறையில் பணியாற்றும் 40 ஊழியர்கள் இத்துறையில் பணியாற்றுவார்கள். புதிய துறைக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக நிதியை ஒதுக்கித்தருவோம்.
ஏற்கனவே இலவச அரிசி வழங்கும் திட்டம் புதுவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் மிக்சி, கிரைண்டர் அளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. 3 லட்சத்து 37 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மிக்கி, கிரைண்டர் வழங்க ரூ. 120 கோடிதேவை.
இது எப்படி முடியும்? நிதி இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. மற்றவர்கள்தான் கூறினார்கள். கட்டிட தொழிலாளர்கள் வாரியம் மூலம் 31 ஆயிரம் பேருக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 56 ஆயிரம் பேருக்கும், மீதமுள்ள 2 லட்சத்து 44 ஆயிரம் ரேஷன்கார்டுகளுக்கு சமூகநலத்துறையின் மூலமும் மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.
மிக்சி, கிரைண்டரை ஒரே நேரத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்க முடியாது. தொகுதிவாரியாக படிப்படியாக டிசம்பர் மாதம் வரை வழங்கப்படும். தரமான மிக்சி, கிரைண்டர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பட்டர்பிளை நிறுவனத்திடம் இருந்து மிக்சி, கிரைண்டர் கொள்முதல் செய்துள்ளோம்.
இது மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படும் அரசு. அனைத்து திட்டங்களும் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்கள். சமூக, பொருளாதாரத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால்தான் சமூகத்தில் மாற்றம் வரும். இவை அனைத்திற்கும் அடிப்படையானது கல்வி. அதற்கு இந்த அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி முக்கியத்துவமும் அளித்து வருகிறது.
முதியோர் உதவித்தொகையை ஏற்கனவே உயர்த்தியுள்ளோம். இதேபோல அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் செவ்வனே செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கம்பன் கலையரங்கத்தில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு லேப்–டாப் வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment