மேகதாது அணை சிக்கலில் இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலும், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் பேசுவதை சதானந்தகவுடா தவிர்க்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அமைச்சர்களுள் ஒருவரான சதானந்த கவுடா, மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்றும், இதற்கான அனுமதியை கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்று தருவார்கள் என்றும் கூறுவது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும்.
நதிநீர் விவகாரங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அமைச்சரவைக்கும், பிரதமருக்கும் மட்டுமே உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்ய வேண்டியது நீர்வளத்துறை அமைச்சர்தான்.
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி கர்நாடகம் விண்ணப்பித்தால் கூட, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி அத்திட்டத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அந்த விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் உமாபாரதி தெளிவாக கூறிவிட்டார்.
ஒட்டுமொத்த நாட்டுக்கும் அமைச்சராக செயல்பட வேண்டிய சதானந்த கவுடா தாம் சார்ந்திருக்கும் மாநிலத்தின் நலனுக்காக மட்டும் குரல் கொடுப்பது ஆரோக்கியமானது அல்ல.
No comments:
Post a Comment