கரூர், ஆக. 12–
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாநில அமைப்பு செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு பின் தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி இலங்கை தமிழர்களை போலீசார், பாஸ் போர்ட்டு போன்ற காரணங்களைகாட்டி கைது செய்து சிறப்பு முகாம்களில் அடைத்துள்ளனர். இவ்வாறு திருச்சி, செய்யாறு, செங்கல்பட்டு, பூந்தமல்லியில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களை பாதுகாக்க சிறப்பு முகாம்களை மூடிவிட்டு பொது முகாம்களில் சேர்க்க வேண்டும். இதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 24–ந்தேதி திருச்சி சிறப்பு முகாம் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம்.
சில அரசியல் கட்சிகள் அரசியல் லாபத்துக்காக மதுபானக்கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்துகின்றன. மதுவிலக்கு அவசியம் தான். ஆனால் ஒரே நாளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதால் பிரச்சனைகள் ஏற்படும். படிப்படியான மது விலக்கே சாத்தியம். கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறுகிறார். இதனை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
அணை கட்டினால் கர்நாடக ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சதானந்தகவுடா தமிழகத்திற்கு எங்கு வந்தாலும் போராட்டம் நடத்துவோம். கரூரில் புதிய பஸ்நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தை நகரில் மையப்பகுதியில் அரசுக்கு தானமாக வழங்கிய 7 ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செயற்குழுவில் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காவேரி, சண்முகம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment