கோலாலம்பூர், ஆகஸ்டு 15-ஒரு மனிதன் பிறந்த மண்ணை விட்டு, எந்த நாட்டிற்குச் சென்றாலும், தனது தாய் மண்ணை அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுவதில்லை. அதற்குச் சான்றாக அமைந்தது, மலேசியாவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற 69-வது இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம்.
பல்லின மக்கள் வாழும் நாடு என்பதால், மலேசியாவில் பொதுமக்களோடு பொதுமக்களாக இந்திய நாட்டவர்கள் இங்கு வாழ்ந்தாலும், இன்றைய இந்திய சுதந்திர தின நன்னாளில், ஒரு குட்டி இந்தியாவையே இந்தியத் தூதரகத்தில் காண முடிந்தது.
தத்தம் இன கலாச்சார உடைகளை அணிந்து குடும்பம் குடும்பமாக வருகைப் புரிந்த இந்தியர்களால் இந்தியத் தூதரகமே வண்ணமயமாக விழாக்கோலம் பூண்டிருந்தது.
காலை 9 மணிக்கு, இந்திய கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் தேசிய கீதத்தை அனைவரும் பாடினர்.
இதனையடுத்து, இந்தியக் குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை, மலேசியாவுக்கான இந்தியத் தூதர் மதிப்பிற்குரிய TS திருமூர்த்தி வாசித்தார்.
இந்நிகழ்வில், இந்தியச் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒரு எளிமையான நிகழ்வு என்றாலும், கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளுடன் இந்திய தூதரகத்தின் சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொண்டு, தாய் நாடு மீதான அவர்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தியதைக் காணமுடிந்தது.
வேலை நிமித்தமாகவும், பிற காரணங்களுக்காகவும், வெளிநாடுகளில் வசித்தாலும், தங்கள் சொந்த நாட்டின் சுதந்திர தினம் என்று வரும் போது, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துகொண்டுள்ளது, இந்தியர்களிடையே தாய் நாடு மீதான, பற்று எப்போதும் குறைவதில்லை என்பதையே நமக்குப் புலப்படுத்துகிறது.
No comments:
Post a Comment