Saturday 15 August 2015

லாரி ஓட்டும் ஈரோடு ஜோதிமணிக்கு கல்பனா சாவ்லா விருது

ஈரோடு அருகே கள்ளிப்பட்டியை சேர்ந்த ஜோதிமணியின் சாதனை மற்றும் துணிவை பாராட்டி இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கல்பனா சாவ்லா விருது வழங்கி பாராட்டினார்.
இரு குழந்தைகளுக்கு தாயான ஜோதிமணி தமிழகத்தின் ஒரே லாரி டிரைவர் என்ற அடையாளத்துடன் இந்தியாவையே கலக்கி வருகிறார்.
ஜோதிமணி தனது சாதனை பயணம் பற்றி கூறியதாவது:–
எங்கள் லாரியில் டிரைவராக வேலை செய்து கொண்டிருந்த நபர் சில நாட்கள் வேலைக்கு வராமல் இருந்தார். இதனால் நாங்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளானோம். இதையடுத்து எனது கணவருடன் சேர்ந்து நானும் லாரி ஓட்டத்தயாரானேன். முதன் முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் எனது கணவருடன் சேர்ந்து ஐதராபாத்துக்கு லாரி ஓட்டிச்சென்றேன்.
தற்போது குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் ஆயத்த ஆடைகளை தனியாகவே ஏற்றிச்செல்கிறேன். அவ்வாறு சென்று விட்டு திரும்பும்போது பருத்தி, மரம் மற்றும் இயந்திர பாகங்களை தமிழகத்திற்கு பாரம் ஏற்றிவருவேன். ஒரு சில நேரங்களில் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை கூட தொடர்ந்து லாரியை இயக்கியுள்ளேன். ஏறத்தாழ ஐந்து வருட கால பயண அனுபவங்களில் நான் ஒரே ஒரு முறை மட்டும் விபத்தை சந்தித்துள்ளேன். கடந்த 2012 ஆம் ஆண்டு லாரியின் பிரேக் செயலிழந்ததால், மற்றொரு லாரியுடன் எனது லாரி மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.
ஜோதிமணியின் கணவர் கவுதமன் கூறுகையில், "லாரி டிரைவரான என்னால் தொடர்ந்து இந்த பணியை செய்ய முடியுமோ... என்ற நிலையை மாற்றி எனக்கு தைரிய மூட்டியவர் என் மனைவி ஜோதிமணி. அவரது மன தைரியத்தால் மற்றொரு லாரியை வாங்கினேன் என்னுடன் கிளீனர் வேலைக்கு வந்து எனக்கு ஒத்தாசையாக இருந்த அவர் பிறகு தனியாகவே ஒரு லாரியை ஓட்டி செல்லும் அளவுக்கு துணிச்சலான பெண்ணாக மாறி விட்டார். கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால் ஜோதிமணி மனைவியாக கிடைத்தது கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்கிறார் பெருமையுடன். ஜோதிமணியின் கணவன் கவுதமன்
போதுமான வருமானத்தை சம்பாதித்து, சுயமாக ஒரு போக்குவரத்து நிறுவனம் தொடங்கும் வரை எனது இந்த பயணம் தொடரும் என்று ஜோதிமணி உறுதியுடன் இருக்கிறார்.

எது எப்படியோ லாரி ஓட்டும் பெண் ஈரோட்டை சார்ந்த ஜோதிமணிக்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விருது பெற்றது அனைத்து தரப்பு மக்களும் பாராட்டியுள்ளனர்.


 

No comments:

Post a Comment