தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் நடந்த குற்றச் செயல்கள் தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிறார்களால் இழைக்கப்படும் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளன.
2014 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 655 பெண் குழந்தைகள், அதாவது ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்தே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டில் குறைந்து விட்டது போல புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகின்றன.
இந்தக் குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. மாறாக குற்றங்களை மறைப்பதில் தான் தீவிரம் காட்டுகிறது.
மற்றொரு புறம், சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து விட்டது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்தற்காக 2014–ம் ஆண்டில் சிறுவர்கள் மீது 464 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலைக் குற்றங்கள் தொடர்பாக 53 சிறார்களும், கொலை முயற்சி வழக்குகளில் 39 சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடும் கொள்ளையில் ஈடுபட்டதாக 13 சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம், அவர்கள் சமூக விரோதிகளால் திட்டமிட்டு தவறான செயல்களில் ஈடுபடுத்தப்படுவதும், நீதிநெறிகள் வலு விழந்து வருவதும் தான்.
இவற்றை பார்க்கும்போது தமிழகத்தின் சட்டம் –ஒழுங்கு எங்கே செல்கிறது என்ற அச்சம் தான் ஏற்படுகிறது. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பதைப் போல, குற்றங்களைத் தடுக்க வேண்டிய அரசும், காவல்துறையும் அதை செய்வதை விட்டுவிட்டு குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகாமல் தடுப்பதில் தான் தீவிரம் காட்டுகின்றன.
தமிழகத்தில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் மாதவாரியாக காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால், இதன்மூலம் தான் குற்றங்கள் குறித்த தகவல் வெளியாகிறது என்பதால் அந்த தகவல்கள் அனைத்தையும் தமிழக அரசு அகற்றி விட்டது. இத்தகைய தகவல் மறைப்பு வேலைகளை செய்வதை விடுத்து குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த அரசும், காவல்துறையும் முன்வர வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment