சிதம்பரம் நடராஜர் கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இல்லை என்று ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், சிதம்பரத்தை சேர்ந்த மகேஷ்குமார் உள்பட 10 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மண்டபத்துக்கு தடை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரங்கள் உள்ளது. 160 அடி உயரமுடைய கிழக்கு கோபுரத்தின் வழியேதான் மாணிக்கவாசகர், சிவபெருமானை தரிசித்த பெருமை உடையது. இத்தகைய கிழக்கு கோபுரம் அருகே நூறடி அகலமுடைய கிழக்கு சன்னதி தெருவில், மண்டபம் அமைக்கும் பணிகளை சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதனால், கிழக்கு கோபுரத்தை பொதுமக்கள் தரிசனம் செய்த முடியாத நிலை ஏற்படும். எனவே, கிழக்கு கோபுரத்தை மறைக்கும் விதமாக மண்டபம் கட்டக்கூடாது என்று நகராட்சி கமிஷனர், கடலூர் கலெக்டர், தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இந்த மண்டபத்தை கட்ட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வக்கீல், சிதம்பரம் நடராஜர் கோவில் தங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறினார்.
அதேபோல, சிதம்பரம் நகராட்சி கமிஷனர், கடலூர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், சிதம்பரம் கோவில் அருகேயுள்ள கிழக்கு சன்னதி தெருவின் புகைபடத்தையும் தாக்கல் செய்தனர்.
11-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
இதையடுத்து நீதிபதிகள், சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பழமையான, புகழ்பெற்ற கோவிலாகும். அந்த கோவில் உள்ள தெருவின் பரிதாப நிலையை, அதிகாரிகள் தாக்கல் செய்த புகைப்படம் மூலம் பார்த்தோம். எனவே, இந்த தெருவில் புதிய சாலைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு, மனுதாரர்களின் கருத்தை கேட்டு தெரிவிக்க வக்கீல் காலஅவகாசம் கேட்டார். எனவே, இந்த வழக்கு நாளை மறுநாள் 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment