Friday, 21 August 2015

கட்டு கட்டாக பணம் கண்டெயினரில் வந்து கவிழ்ந்து விபத்து - நாகர்கோவில் அருகே பல கோடி ரூபாய் கட்டுகளுடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரியால் பரபரப்பு

பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பார்கள் அது போல கோடி கோடி ரூபாய் நோட்டுகளை கட்டு கட்டாக கண்டெயினர் லாரி ஒன்று குளத்தில் கவிழ்ந்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரள பகுதி மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த வைத்துள்ளது.
நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் உள்ளது. இந்த ஊருக்கு வெளியே நெல்லைக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ரோட்டோரம் ஒரு குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை. இது வளைவான பகுதியாகும். இதனால் வாகனங்கள் கவனத்துடனேயே இந்த இடத்தை கடந்து செல்லும்.

இந்த நிலையில் நேற்று மதியம் காவல்கிணற்றை கடந்து 2 கண்டெய்னர் லாரிகள் குமரி மாவட்டம் நோக்கி வந்தன. அதில் ஒரு லாரி இந்த குளம் பகுதியில் வந்தபோது ரோட்டின் குறுக்கே ஆடுகள் பாய்ந்து ஓடின. ஆடுகள் மீது மோதி விடாமல் இருக்க, டிரைவர் லாரியை இடதுபக்கம் திருப்பினார். இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மின்கம்பம் மீது மோதி, ரோட்டின் இடதுபக்கம் உள்ள குளத்தில் பாய்ந்தது.

லாரியின் முன்பக்க கேபின் குளத்தில் பாய்ந்தபோது கேபினுக்கும், கண்டெய்னருக்கும் இடையே உள்ள இணைப்பின் அச்சு முறிந்தது. இதனால் கண்டெய்னர் பக்கவாட்டில் குளத்தில் சரிந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயம் அடைந்தார். மின்கம்பம் சரிந்ததில் உயர்அழுத்த மின்கம்பிகள் லாரி மீது உரசியபடியே இருந்தன. இருப்பினும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் ரோட்டை கடந்த ஆடுகளில், 3 ஆடுகள் பலியாகின.

இதற்கிடையே, அந்த லாரியுடன் வந்த மற்றொரு கண்டெய்னர் லாரி சற்று தூரம் வந்து தேரேகால்புதூர் ஊரில் ரோட்டோரம் ஒதுக்கி நிறுத்தப்பட்டது.

இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதற்கிடையே காவல்கிணறு சந்திப்பு அருகே உள்ள மகேந்திரகிரி திரவ திட்ட இயக்க மையத்தில் இருந்து துணை ராணுவ படையினர் (மத்திய தொழில் பாதுகாப்பு படை) விரைந்து வந்து லாரியைச் சுற்றி நின்றனர்.

இதனால் லாரியில் இருப்பது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான ராக்கெட் உதிரி பாகங்களாக இருக்கும் என்று கூறப்பட்டது. எனவே, லாரி கவிழ்ந்த பரபரப்பு அப்படியே அடங்கியது. இப்படியே நேரம் சென்று கொண்டிருந்தது. லாரியை மீட்பதற்கான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் உள்ளூர் போலீசார் அங்கு சென்று தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். 2 ஜெனரேட்டர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டன. கவிழ்ந்து கிடந்த லாரியின் முன்னும், பின்னும் அவை இறக்கி வைக்கப்பட்டு மின்விளக்கு வசதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதனால் சற்று அடங்கியிருந்த பரபரப்பு, மெல்ல மெல்ல அதிகரித்தது.

இதற்கிடையே, லாரியில் பெட்டி பெட்டியாக பல கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டு கட்டுகள் இருப்பதாக தகவல் பரவியது. மைசூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அவற்றை கொண்டு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அங்கு விரைந்தனர். லாரியை சுற்றி நின்ற பாதுகாப்பு படையினரிடம் கேட்டபோது லாரியில் இருப்பது என்னவென்று தெரியாது என்றனர். இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் இருந்து வங்கி அதிகாரிகள் சிலர் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் லாரியில் இருப்பது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் என்பதை யூகிக்க முடிந்தது.

ரூபாய் நோட்டுகளுடன் கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி பணத்தை வெளியே எடுப்பது சிரமமான காரியம் என்பதால், திருவனந்தபுரத்தில் இருந்து வேறு ஒரு கண்டெய்னர் லாரியை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. மேலும் துணை ராணுவப்படையினரையும் கூடுதலாக வர வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்படியே நேரம் சென்று கொண்டிருந்தது. இரவு 10 மணிவரை திருவனந்தபுரத்தில் இருந்து கண்டெய்னர் லாரி வரவில்லை. நேரம் செல்ல செல்ல அதிகாரிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர். துணை ராணுவத்தினர் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கண்டெயினரில் மொத்தம் 210 பெட்டிகள் உள்ளதாகவும்,  அவை M.I.X.XI என பதிவு பெட்டியில் உள்ள பணத்தின் மதிப்பை பற்றிய குறியீடாம். விபத்திற்குட்பட்ட லாரியிலிருந்து கண்டெயினர் பகுதி மீட்கப்பட்டது, விபத்து பகுதியில் இருந்த போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment