ஆந்திர மாநிலம் சித்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.55 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளும் ஆசிட் பாட்டில்கள், கற்கள், மூங்கில் தடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சித்தூர் போலீஸ் எஸ்.பி. இது குறித்து கூறும்போது, "ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதி போலீஸாரும் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் கும்பல்களைச் சேர்ந்தவர்கள். 4 வெவ்வேறு கும்பல்களைச் சேர்ந்த 12 பேர் சிக்கியுள்ள்னது. அவர்களிடமிருந்து ரூ.55 லட்சம் மதிப்புள்ள முதல் தர செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 4 சொகுசு கார்களும், 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர முதல் முறையாக கடத்தல்காரர்களிடம் இருந்து ஆசிட் பாட்டில்கள், கற்கள், மூங்கில் தடிகள் ஆகிய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கடத்தல்காரர்கள் கூறும்போது, "எங்கள் வாகனத்தை போலீஸார் இடைமறித்தால் அவர்களுக்கு எதிராக பயன்படுத்த இப்பொருட்களை வைத்துள்ளோம்" என்றனர்.
பிடிபட்டவர்களில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த நடராஜன் இளங்கோ, தயாளன் ராஜூ ஆகியோரும் அடங்குவர். இவர்கள் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டும் முதல் இதுவரை 100 டன் செம்மரங்களை கடத்தியுள்ளனர்.
இவர்களைத் தவிர திருவண்ணாமலையச் சேர்ந்த வள்ளிக்குட்டி கோபாலன் என்பவரை வேட்ருகுப்பம் போலீஸார் கைது செய்தனர். வேலூரைச் சேர்ந்த கணபதி முருகதாஸ், கோவிந்தா வெங்கடேஷ் ஆகியோரை எஸ்.ஆர்.புரம் போலீஸார் கைது செய்தனர். சித்தூரைச் சேர்ந்த கிரிபாபு என்ற மிலிட்டரி கிரியை குடிபாலா போலீஸார் கைது செய்தனர். சித்தூர் போலீஸார் அதிரடி சோதனையில் வேலூரைச் சேர்ந்த முகமது அஜ்மத், ஓசூரைச் சேர்ந்த ஆறுமுகம், சித்தூர் கங்கனபள்ளியைச் சேர்ந்த சாய்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சித்தூரின் ரங்கைய்யா, ஹரிகிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். செம்மரக் கடத்தல் கும்பல் தலைவர்களான மாதேஷ், தியாகராஜ், ரமேஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்" என்றார்.
அவர் மேலும் கூறும்போது, "செம்மரக் கடத்தல் வழக்குகளில் கைதானவர்கள் குறித்த விசாரணை மேற்கொள்வதற்காக ஆந்திர மாநிலம் சித்தூரில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்படவுள்ளது. இதுவரை செம்மரக் கடத்தல் தொடர்பாக 500 வழக்குகள் பதிவாகியுள்ளன. 3,500 பேர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. இவர்களில் 46 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment