Saturday, 3 October 2015

இலங்கை சிறையில் உள்ள 35 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்



இலங்கை சிறையில் உள்ள 35 தமிழக மீனவர்களையும், 31 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்ட மற்றொரு சம்பவம் குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அக்டோபர் 1-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களது மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் எதுவும் இல்லாத அப்பாவி இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை போர் வெறியோடு தாக்குதல் நடத்தி வருவது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமான பாக் நீரிணை கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் அப்பாவி தமிழக மீனவர்களை மிரட்டும் நோக்கத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு உள்ளது. இதுகுறித்து தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்.
இப்பிரச்சினையில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர ஏற் கெனவே இலங்கை சிறையில் உள்ள 28 மீனவர்கள், 31 படகு களை விடுவிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment