ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
ஐம்பது ஆண்டு காலமாக நம்மைச் சிரிக்க வைத்த ஆச்சி மனோரமா, இன்று நம்மை அழ வைத்து மறைந்துள்ளார். இதுதான் இயற்கை நியதி என்றாலும்கூட, இதைத் தாங்கிக் கொள்வது அவ்வளவு எளிதல்ல.
எந்த நொடியிலும், எந்தச் சூழலிலும் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைத்து நம் மனப் புண்களை ஆற்றுவதில் ஆற்றல் மிக்கவர்.
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் என்பார் வள்ளுவர். ஆனால், கவலையை மாற்றி சிரிக்க வைக்கும் ஆற்றல் என்பது அந்த ஆற்றலில் எல்லாம் தலையாயது என்று மனோரமா நிருபித்துள்ளார்.
கலையின் மூலம் எவ்வளவு சிறப்பான நிலையை எய்த முடியும் என்பதற்கு ஆச்சி மனோரமா அவர்களின் வாழ்க்கையே சான்றாகும்.
பாட்டி சொல்லைத் தட்டாதே என்று அவர் சொந்தக் குரலில் பாடி நடித்த அந்தப் பதிவுகள் எல்லாம் கலை உலகத் தலைமுறைக்கு ஒரு நூலகமாக என்றைக்கும் விளங்கும்.
தமிழ் உலகில் தன் திறமையால் தடம் பதித்த பெண்மணிகளுள் நாம் வாழும் காலத்தில் மிகச் சிறப்பான இடம் பெற்றவர் ஆச்சி மனோரமா.
தமிழ் ஈழ மக்களின் வேதனையைக் கண்டு தமிழகத்தில் அதற்காக நடைபெற்ற அறப்போர் களங்களில் உணர்வுடன் பங்கேற்றவர் அவர்.
ஆச்சி மனோரமா மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அவரது குடும்பத்தாருக்கும், கலை உலக ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்
No comments:
Post a Comment